மயிலாப்பூரில் பாஜ திறந்த தேர்தல் அலுவலகத்திற்கு சீல்: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: மயிலாப்பூரில் பாஜவினர் திறந்த தேர்தல் அலுவலகம் திறந்த மறுநாளே சீல் வைக்கப்பட்டது. வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் கட்சி அலுவலகம் திறந்ததால் அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். தமிழக பாஜவின் தென் சென்னை மாவட்டம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ஆர்‌.கே.மடம் சாலையில் தேர்தல் அலுவலகம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜா தலைமையில் அலுவலகத்தை பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் நேற்று அலுவலகத்தில் அதிரடி ஆய்வு செய்தனர். அதில், கோயில் இடத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாஜ தேர்தல் அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம், மறுநாளே சீல் வைக்கப்பட்டது மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாடகைக்கு எடுத்து அரசியல் கட்சி அலுவலகம் திறந்ததால் இந்த அதிரடி நடவடிக்கையை இந்து அறநிலையத்துறை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் அரசை வெகுவாக பாராட்டினர்.

The post மயிலாப்பூரில் பாஜ திறந்த தேர்தல் அலுவலகத்திற்கு சீல்: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: