பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டிஜிபி 3வது நாளாக ஆஜராகி வாதிட்டார்

விழுப்புரம், பிப். 6: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி நேற்று 3வது நாளாக ஆஜராகி வாதத்தை தெரிவித்தார். தொடர்ந்து இன்றைய தினம் ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.20,500 அபராதமும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தியதற்கான குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இந்த வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி தாக்கல் செய்த ராஜேஷ்தாசின் மனுவை உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தன. மேலும் சிறப்பு டிஜிபி வாதத்தை தெரிவிக்குமாறும், இல்லையென்றால் நீதிமன்றமே மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதிட நடவடிக்கை எடுக்கும் எனக் கூறி உத்தரவிட்டார். தொடர்ந்து சிறப்பு டிஜிபி கடந்த 1, 2ம் தேதி ஆஜராகி வாதத்தை தெரிவித்தார். வாதம் நிறைவடையாத நிலையில் நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் உணவு இடைவேளைக்கு பிறகு சிறப்பு டிஜிபி ஆஜராகினார். அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம் மீண்டும் ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

The post பாலியல் வழக்கில் 3 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டிஜிபி 3வது நாளாக ஆஜராகி வாதிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: