தஞ்சாவூர் குருதயாள் சர்மா பகுதியில் மூடப்படாமல் உள்ள கழிவுநீர் தொட்டிசீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

 

தஞ்சாவூர், மே 18: தஞ்சாவூர் மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக ஆங்காங்கே குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாநகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் குரு தயாள் சர்மா பகுதியில் இருந்து தொம்பன் குடிசை செல்லும் வழியில் பாதாள சாக்கடை (மேன்ஹோல்) மூடாமல் திறந்த வெளியில் உள்ளது.

அருகே இரும்பு பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தினமும் காலை முதல் இரவு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று செல்லும் நிலை உள்ளது. அந்த பகுதியில் நீண்ட நெடுங்காலமாக பாதாள சாக்கடை மூடாமல் இருப்பது துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இது குறித்து துரித நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக பாதாள சாக்கடையை மூட வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூர் குருதயாள் சர்மா பகுதியில் மூடப்படாமல் உள்ள கழிவுநீர் தொட்டிசீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: