திருத்தணி அருகே பரபரப்பு கல்லூரி மாணவி சாவில் மர்மம் என மறியல்: டிஎஸ்பி சமரசம்

திருத்தணி, மே 18: திருத்தணி அருகே தனியார் கல்லூரி மாணவி சாவில் மர்மம் இருப்பதாக கூறி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி அருகே பொன்பாடி மேட்டு காலனியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி நரசிம்மன். இவரது மகள் ரஞ்சனி(18). இவர், திருத்தணியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்களும் வேலைக்கு செல்வதால், ரஞ்சனி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் நரசிம்மன் மற்றும் அவரது மனைவி வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி இறந்த ரஞ்சனி உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக நரசிம்மன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இளம் பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவியதால், ஆத்திரமடைந்த இறந்த கல்லூரி மாணவி ரஞ்சனி உறவினர்கள் மற்றும் கிராம பெண்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் நேற்று பொன்பாடி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவி இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டி.எஸ்.பி விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து, கல்லூரி மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி உறுதி அளித்ததை அடுத்து அதனை ஏற்று சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.

The post திருத்தணி அருகே பரபரப்பு கல்லூரி மாணவி சாவில் மர்மம் என மறியல்: டிஎஸ்பி சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: