கூடுவாஞ்சேரியில் பயணியர் நிழற்குடையில் தள்ளுவண்டி உணவகம்: பயணிகள் கடும் அவதி

கூடுவாஞ்சேரி, மே 18: கூடுவாஞ்சேரியில் அரசு மருத்துவமனையையொட்டியுள்ள பயணியர் நிழற்குடையின் கீழ் தள்ளுவண்டி உணவகம் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. இந்நிலையில், மருத்துவமனை முன்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் நிழற்குடை மற்றும் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை வெப்பம் தாங்க முடியாமல் நிழற்குடையில் வந்து பேருந்திற்காக பயணிகள் மணி கணக்கில் காத்து நிற்கின்றனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பாஜ சார்பில் தண்ணீர் பந்தலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கூடுவாஞ்சேரியில் பயணியர் நிழற்குடையில் தள்ளுவண்டி உணவகம்: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: