ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இல்லை

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அளித்த பதிலில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக இதுவரை 35 அரசியல் கட்சிகளிடம் இருந்து பதில்கள் பெறப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஆய்வு குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை” என்றார். மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டத்தை கருத்தில்கொண்டு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

* 5வது கூட்டம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆய்வு குழுவின் ஐந்தாவது கூட்டம் அதன் தலைவரான முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் அதன் தாக்கம் குறித்த தொழில்துறையின் கருத்துக்களை குழுவிடம் வழங்கினார்கள். மேலும் தொழில்துறையினர் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடனும் இந்த குழு ஆலோசனை நடத்தியுள்ளது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு இல்லை appeared first on Dinakaran.

Related Stories: