திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்


திருப்பூர்: திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் 8 கால வேள்விப் பூஜைக்குப் பின் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் நமச்சிவாயா கோசம் விண்ணை முட்ட கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையாகக் கொண்டதும், மூன்று ஆண்டுகள் முன்பு முதலையுண்ட பாலனை சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரப் பாடல் பாடி உயிருடன் மீட்டெடுத்ததும், மூர்த்தி – தலம் – தீர்த்தம் என மும்மைச் சிறப்பு வாய்ந்ததுமான பெருமை கொண்ட பழைமையான திருத்தலமாக விளங்கும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ், மற்றும் பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர். 250 க்கும் மேற்பட்ட உபயதாரர்கள் நன்கொடையில் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் பிரம்மாண்டமாக பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நிறைவு செய்யப்பட்ட இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு அனுமதி பெறுதல் மற்றும் ஆனைமுகத்தோன் வேள்வியுடன் துவங்கியது. கைலாயம் போல் காட்சியளிக்கும் பிரம்மாண்ட யாக சாலையில் 79 குண்டங்கள் அமைக்கப்பட்டு நூறு சிவாச்சாரியார்கள் கொண்டு ஜனவரி 29-ம் தேதி துவங்கிய முதல் கால வேள்விப்பூஜை அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முதல் ஏழு வரை நாளொன்றுக்கு இரண்டு கால வேள்விப்பூஜை என நேற்று இரவு வரை ஏழு கால வேள்விப் பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் கோயிலில் தங்க முலாம் பூசிய சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக செய்யப்பட்டு நிறுவப்பட்ட கொடிமரம், கனக சபை, பாலதண்டாயுதபாணி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, விழாவின் முக்கிய நாளான இன்று என்குணத்தோன் ஆகிய அவிநாசி நாதருக்கு அதிகாலை 6 மணிக்கு துவங்கிய எட்டாம் கால வேள்விப்பூஜை 8 மணி வரை நடைபெற்றது. இந்த எட்டாம் கால வேள்விப் பூஜை வரை நூறு சிவாச்சாரியர்களால் எட்டு லட்சம் ஆஹூதிகள் அர்ச்சிக்கப்பட்டு, தொடர்ந்து வேள்விப்பூஜையில் வைக்கப்பட்டிருந்த திருக்குடங்களை சிவாச்சாரியர்கள் இறைவனின் பேரருளோடு சுமந்தவாரு திருக்கோயிலில் உலா வந்தனர்.

சரியாக இன்று காலை 09.17 மணியளவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம், ஐந்து நிலை கொண்ட அம்மன் கோபுரம், மூலவர்களான அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகையம்மன் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யப்யப்யப் பெருமான் சன்னதி ஆகிய ஐந்து கோபுர கலசங்களுக்குளுக்குளுக்கு சிவாச்சாரியார்கள் ஒரு சேர திருக்குடங்களில் கொண்டு வந்த புனித தீர்த்தத்தால் பல்லாயிரம் பக்தர்களின் விண்ணைத் தொடும் நமச்சிவாய கோசங்கள் மத்தியில் மங்கள வாத்தியமும் தேவாரப் பாடலும் முழங்க கும்பாபிஷேகம் செய்தனர். அதைக்கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் கண்ணீர் மல்க இறைவனை வழிபட்டனர். ஹெலிகாப்டர் மூலமாக ராஜகோபுரங்களுக்கு மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டது.

கோயிலை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தன்னார்வார்கள் பங்களிப்பில் பக்தர்களுக்கு பெரிய ட்ரோன் மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு தன்னார்வளர்கள் சார்பில் பல்வேறு திருமணம் மண்டபங்களில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவிநாசி பேரூராட்சி சார்பாக தன்னார்வளர்களின் பங்களிப்புடன் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பெருந்திருமஞ்சனம், பேரொளி ஆராதனையும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நிறைவாக இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: