ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: போலீசார் அதிரடி நடவடிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சாலையோரத்தில் வைத்திருந்த ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் அதிரடியாக அகற்றினர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பஜார் பகுதி சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த சாலை வழியாக ஆந்திர மாநிலமான திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னைக்கும், சென்னையிலிருந்து ஆந்திராவுக்கும் செல்கிறது. மேலும் ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க பைக்குகளில் வந்து செல்வார்கள். இதனால் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் சாலையோரக் கடைகளே ஆகும். இந்த சாலையோரக் கடைகளை அகற்றவேண்டும் என பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பலமுறை கலெக்டருக்கும், காவல் துறைக்கும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, எஸ்.ஐ. பூபாலன், போக்குவரத்து எஸ்.ஐ. சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று திடீரென அதிரடியாக சாலையோர கடைகளை அகற்றினர். மேலும் சாலைப்பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தினாலோ, கடைகள் வெளியே வந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

The post ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: போலீசார் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: