மன்னார் வளைகுடாவில் காற்று சுழற்சி மேலும் 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களிலும் அனேக இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இது நேற்று மாலை வரை நீடித்தது. அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 160 மிமீ மழை பெய்துள்ளது. சிங்கம்புணரி 140 மிமீ, மன்னார்குடி 130 மிமீ மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை, நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது. பிற மாவட்டங்களில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து காணப்பட்டது. தஞ்சாவூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதுதவிர, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதே நிலை 19ம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post மன்னார் வளைகுடாவில் காற்று சுழற்சி மேலும் 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: