ஈரோடு மாவட்டத்தில் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு

 

ஈரோடு, பிப். 2: ஈரோடு மாவட்டத்தில் இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் 15.32 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக 27 மெட்ரிக் டன் நெல் விதைகள், 12.2 மெட்ரிக் டன் சிறுதானியங்கள், 13 மெட்ரிக் டன் பயறு வகைகள், 18 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்கள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு விதைகளை பெற்றுக்கொள்ளலாம். இதே போல ரசாயண உரங்களான யூரியா 6,972 மெட்ரிக் டன், டிஎபி 1,746 மெட்ரிக் டன், பொட்டாஷ் 5382 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 13,074 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. கீழ்பவானி முதல் மண்டல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய 36 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. நெல் வரத்தை பொறுத்து கூடுதல் இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். இவ்வாறு கூறினர்.

The post ஈரோடு மாவட்டத்தில் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு appeared first on Dinakaran.

Related Stories: