புதிய சுற்று வட்டச்சாலைக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் மனு

ஈரோடு, மே 16: ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம் புதுார் முதல் கவுந்தப்பாடி அருகே உள்ள எல்லீஸ்பேட்டை வரை, 100 அடி அகலத்தில் சுற்று வட்டச் சாலை (ரிங் ரோடு) அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 32 கி.மீ. தூரம் அமையவுள்ள இந்த சாலைப் பணிக்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த சுற்று வட்டச் சாலைக்காக பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், குடியிருப்புகள், பட்டா நிலங்கள் போன்றவற்றை கையகப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக இச்சாலை அமையும் கிராம மக்களுக்கு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாவடிபாளையம் புதூர், ஓலப்பாளையம், பிச்சாண்டம்பாளையம், காஞ்சிகோவில், திருவாச்சி, கூரபாளையம், மூலக்கரை, புத்தூர் புதுப்பாளையம், புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், துய்யம்பூந்துறை, சின்னியம்பாளையம், கூரபாளையம் என பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: சாவடிபாளையம் புதூர் எல்லீஸ்பேட்டை வரையிலான சுற்று வட்டச்சாலைக்கான பாதையில் பல வீடுகள், கட்டடங்கள், பட்டா நிலங்கள், பொது இடங்கள், வழித்தடங்கள் மற்றும் ஏராளமான விளை நிலங்களும், பல ஆண்டுகள் வளர்க்கப்பட்டுள்ள மரங்களும் உள்ளன. அவற்றை எல்லாம் அகற்றும்போது எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். சுற்று வட்டச்சாலை அமையும் இடங்களில் பல தலைமுறையாக வசிப்போரின் வீடுகள், விளை நிலங்கள் உள்பட வாழ்வாதரத்தை அழிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு தேவை இல்லை. எனவே, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதிய சுற்று வட்டச்சாலைக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: