ஒலிம்பிக் போட்டிக்கு விஷ்ணு சரவணன் தகுதி

ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் பல்வேறு விளையாட்டுகளில் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் படகு போட்டியில் பங்கேற்க முதல் இந்தியராக விஷ்ணு சரவணன் (24) தகுதி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் ஐ.எல்.சி.ஏ-7 உலக சாம்பியன் படகுப் போட்டியின் தரவரிசையில் சாதித்ததின் மூலம் இந்த வாய்ப்பை விஷ்ணு பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷ்ணு இப்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்சில் பங்கேற்ற விஷ்ணு, தொடர்ந்து 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ளார்.

* தாய்லாந்து மாஸ்டர்ஸ் 2வது சுற்றில் சங்கர் முத்துசாமி

பாங்காக்கில் நடைபெறும் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரில், இந்திய வீரர் சங்கர் முத்துசாமி சுப்ரமணியன் (தமிழ்நாடு) தகுதிச் சுற்றின் 2 ஆட்டங்களிலும் வென்று முதன்மை சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மலேசியாவின் லியோங் ஜூன் ஹோவுடன் மோதிய சங்கர் 21-14, 21-17 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 46 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், மிதுன் மஞ்சுநாத் ஆகியோரும் 2வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

The post ஒலிம்பிக் போட்டிக்கு விஷ்ணு சரவணன் தகுதி appeared first on Dinakaran.

Related Stories: