சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுப்பு


சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து சண்டிகர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டை திருத்தி இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்ததால் பாஜக வெற்றி பெற்றது. வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.

சண்டிகர் மாநகராட்சி மன்றத்தில் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணிக் கட்சிகளான காங்கிர ஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன. என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணி இடையிலான முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.

இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இண்டியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால் 16 வாக்குகள் பெற்ற பாஜகவேட்பாளர மனோஜ் சோன்கர்வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 12 வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார்.

சண்டிகர் மாநகராட்சிக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், புதிய மேயராக பாஜக கவுன்சிலர் மனோஜ் சோன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூத்த துணை மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தனர். மேயர் தேர்தலில் பாஜக மோசடி செய்து, வெற்றி பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சண்டிகர் உயர் நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி அணுகியுள்ளது. ஆம் ஆத்மியின் மனு இன்று விசாரணைக்கு வந்தது .

மனுவை விசாரித்த நீதிமன்றம் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து சண்டிகர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: