அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று தை உத்திர வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே ஆண்டுதோறும் தை மாத உத்திர நட்சத்திரத்தன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

நிகழாண்டில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அதன்பின் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி விமானங்களுக்கு ஒரே நேரத்திலும், தொடர்ந்து வள்ளி, தெய்வானை விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை புஷ்பாஞ்சலி வருஷாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல், பக்தர்கள் வழங்கிடும் அழகும், மனமும் மிக்க மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. இன்று குமரவிடங்கப்பெருமான், தேவசேனா தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில்முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

The post அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று தை உத்திர வருஷாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: