தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா நோய்’.. இவர்கள் ஆளுநர்களா? பாஜக செய்தித் தொடர்பாளர்களா?: அமைச்சர் ரகுபதி விளாசல்!!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அறிக்கை அளித்திருக்கிறார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகிய 3 பேருக்கும் இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுக போட்டி நிலவுவதாக அவர் பதில் அறிக்கையை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

ஆளுநர் ரவிக்கு ‘மீடியா மேனியா நோய்’: அமைச்சர் ரகுபதி
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. மாநில அரசை விமர்சித்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

ஆளுநர்களா? பாஜக செய்தித் தொடர்பாளர்களா?: அமைச்சர் ரகுபதி
ஆளுநர் என்பதையே மறந்து, பாஜவால் அனுப்பப்பட்ட மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல மூவரும் நடக்கின்றனர். தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார் ஆளுநர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“வாய்க்கு வந்த வார்த்தைகளை பயன்படுத்தும் ஆளுநர்”: அமைச்சர் ரகுபதி
நாகை சென்ற ஆளுநர் ரவி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை விமர்சித்துள்ளார். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் சரியில்லை என வாய்க்கு வந்த வார்த்தைகளை ஆளுநர் பயன்படுத்தி உள்ளார். அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அது கூறித்து ஆளுநர் கேட்டறியலாம். எதிர்க்கட்சியை போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்காக எப்போதாவது ஆளுநர் டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் உள்ளார் ஆளுநர் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

ஆளுநர் என்பவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?: அமைச்சர் ரகுபதி
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகின்றார்? என்றும், வாய்க்கு வந்ததை பேசிடவும் எழுதிடவும் ஆளுநர் என்பவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் ஆளுநர் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அயோத்தி இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ரவி ஒருமுறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே என்று அமைச்சர் கூறியுள்ளார்.

The post தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா நோய்’.. இவர்கள் ஆளுநர்களா? பாஜக செய்தித் தொடர்பாளர்களா?: அமைச்சர் ரகுபதி விளாசல்!! appeared first on Dinakaran.

Related Stories: