இந்த வார விசேஷங்கள்

திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்
28.1.2024 – ஞாயிறு

சென்னை பூவிருந்தவல்லிக்கு அருகே திருமழிசை என்ற ஊரில், கன காங்கி எனும் தேவலோக மாதருக்கும், பார்கவ முனிவருக்கும் தவத்தின் பலனாக அவதரித்த திருமழிசையாழ்வார், பூவுலகில் 4700 ஆண்டுகள் ஜீவித்திருந்தார். அநேக சமயங்கள் மற்றும் தத்துவ ஆராய்ச்சி மேற்கொண்ட காரணத்தினால், பல்வேறு திருநாமங்களையும் விருதுகளையும் கொண்டவர். திருமழிசைப்பிரான்.

`சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல்’

திருமழிசையார், சிவ வாக்கியர், சக்கரத்தாழ்வார், பக்திசாரர், உரையிலிடாதார், குடமூக்கிற் பகவர், கும்பகோணத்து பாகவதர், சித்தர், தத்துவமேதை, மகாநுபாவர், மெய்ஞ்ஞான செல்வர், அருட்குண பெரியார், பார்கவ முனிவரின் அருந்தவ செல்வர் என்று பல திருநாமங்கள் இவருக்கு உண்டு. சமணம், பௌத்தம், மாயாவதம் மற்றும் சைவம் பின்பற்றி, இறுதியில் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரால் திருத்திப்பணிக்கொண்ட பிறகு, தீவிர  ஸ்ரீவைணவராய், இறுதி வரை திகழ்ந்தார். திருமழிசை யாழ்வாரின் அருளிச்செயல்கள்: 1. நான்முகன் திருவந்தாதி (96 பாசுரங்கள்) 2. திருச்சந்த விருத்தம் (120 பாசுரங்கள்).

ஆழ்வாரின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் சில:

1. ஆழ்வார் உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், தினமும் தனக்கு பால் அமுது செய்த மகப்பேறு கிட்டா தம்பதியினருக்கு இளமை நல்கி, குழந்தை பாக்கியம் அருளி, பிறந்த குழந்தைக்கு, கணிக்கண்ணன் என்று நாமமிட்டு, தன்னோடு தன் அந்தரங்க சிஷ்யராகக் கொண்டிருந்தார்.

2. ஆழ்வார் திருவெஃகாவில் கணிக்கண்ணனுடன் இருந்த பொழுது, தனக்கு சேவை புரிந்த வயோதிக பெண்ணிற்கு அவளின் வேண்டுதல்படி என்றும் குமரியாக இருக்க அருள்புரிந்தார். ஒருநாள் இந்த குமரியைக் கண்ட பல்லவ அரசன் காதல் வயப்பட்டு மணம் புரிந்தான். வருடங்கள் ஓட, அரசன் மட்டும் முதுமையடைய, அரசி இளமையுடன் இருப்பதற்கான காரணத்தை அறிந்து, ஆழ்வாரின் சீடன் கணிக்கண்ணன் உஞ்சவிருத்திக்கு வந்தபொழுது, தமக்கும் உமது குரு இவ்வரத்தை நல்க வேண்டும் என கட்டளையிட்டான்.

கணிக்கண்ணன் மறுத்திட, அரசன் இக்கணமே நீயும் உனது குருவும் காஞ்சியை விட்டு நகரவேண்டும் என ஆணை பிறப்பித்தான். ஆழ்வாரும் இனி நாமிங்கிருக்க போவதில்லை; நாம் புறப்பட்ட பிறகு எம்பெருமானும் இங்கு கண் வளர்ந்தருள போவதில்லை எனப் புறப்பட்டார். அப்போது பாடிய பாடல்.

`கணிக்கண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன்
நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்’

ஆழ்வாரும், கணிக்கண்ணனும், பெருமாளும், இதர தேவதைகளும் காஞ்சியை விட்டு அகன்று அருகிலுள்ள இடத்தில ஓர் இரவு தங்கியதால் அந்த ஸ்தலத்துக்கு “ஓரிரவிருக்கை” என பெயர் பெற்று, தற்பொழுது ஓரிக்கை என மருவியுள்ளது. காஞ்சி இருளால் சூழ்ந்ததும், அரசன் பல்லவராயன் தன் தவறுணர்ந்து ஓரிக்கை சென்று ஆழ்வார் மற்றும் கணிக்கண்ணன் பாதம் பணிந்திட, மீண்டும் அனைவரும் காஞ்சியில் எழுந்தருள ஒரு பாடல் பாடினார்.

`கணிக்கண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்’

ஆழ்வார் சொற்படி நடந்ததால், திருவெஃகா பெருமாளுக்கு, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப்பெயர். பெருமாள் முன்போல் வலத்திருக்கை கீழாகவன்றி இடத்திருக்கை கீழ்ப்பட கண் வளர்ந்தருள்கிறார்.

3. ஆழ்வார் குடந்தைக்கு செல்கையில், புதுப்புனலுக்கு தனது நூல்கள் அனைத்தையும் அருளிட, அதில் நான்முகன் திருவந்தாதியும் திருச்சந்த விருத்தமும் புனலை எதிர்த்து திரும்பிட, புனல்வாதத்தில் வென்ற இவ்விரு நூல்களையும் புவனத்திற்கு அருளினார். புனல்வாதத்தில் வென்ற ஏடுகளுடன் ஆராவமுதன் சந்நதிக்குச் சென்று பெருமானை சேவித்து, தன்னுடன் சயன கோலத்திலிருந்து எழுந்து பேச வேண்டும் என்று பக்தியுடன் துதிக்கிறார்.

`நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக்
குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு, வாழி! கேசனே!’

இங்ஙனம் ஆழ்வார் வாழ்த்தியதும் ஆராவமுதன் உத்தானசாயியாக (எழவும் படுக்கவும் இல்லாத இடைநிலை) நின்றுவிட்டாராம்.

சங்கடஹர சதுர்த்தி
29.1.2024 – திங்கள்

விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும். ‘சங்கட’ என்றால் துன்பம் `ஹர’ என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும்
என்பது ஆன்றோர் வாக்கு.

`அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை
கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!’

சண்டேசர் குரு பூஜை
30.1.2024 – செவ்வாய்

ஏழாம் நூற்றாண்டில், கும்பகோணம் – திருப்பனந்தாள் சாலையில் திருவாய் பாடிக்கு வடமேற்கே 1.5 கி.மீ. தூரத்தில் மண்ணியாற்றின் கரையில் உள்ள திருசேங்கனூர் என்ற ஊரில் விசாரசருமர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒரு முறை சிறுவன் ஒருவன், தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, வெகுண்ட விசாரசருமர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூசைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள். விசாரசருமர் மண்ணில் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிஷேகம் செய்தார்.

அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூசையை தடுக்கச் சென்றார். கோபத்தால், சிவாபிஷேகத்திற்கு வைத்திருந்த பாலினை தட்டிவிட்டார். சிவனை நிந்தை செய்த தந்தையை தண்டிக்கும் பொருட்டு, அருகிலிருந்து குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது விசாரசருமரின் பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.

விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன்தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டேஸ்வர பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய காலம் கி.பி.400-1000 என்று கருதப்படுகிறது. சிவாலயங்களில் ஆலயச்சுற்று வரும்போது கருவறை அபிஷேக நீர் விழும் கோமுகி அருகில் சிறு சந்நதியில் இருக்கும் சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர், சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள், சண்டிகேஸ்வரரின் பெயரால் கணக்கு வைக்கப்படுகின்றன. ‘‘சிவன் சொத்து குலநாசம்’’ என்பர்.

அதனால், சிவாலயத்திலிருந்து எந்தவொரு பொருளையும் தாங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என்பதைத் தெரிவிக்கவே, இறுதியாக அவர் சந்நதிக்கு வந்து இரு கைகளையும் தட்டிவிட்டு வணங்கும் வழக்கம் வந்ததாகக் கூறுவர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்துவிடும். அதனால், அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும், சிவாலய தரிசன பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பெரும்பாலும் சண்டிகேஸ்வரர், தன்னுடைய ஆயுதமாக மழுவுடன் காணப்படுகிறார். மழு என்பது சிவபெருமானுடைய ஆயுதமாகும். சிவாலயங்களின் கோமுகி அருகே அமர்ந்த நிலையில் உள்ளார். உற்சவராக இருக்கும் சண்டிகேஸ்வரர் நின்ற நிலையில் உள்ளார்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை
30.1.2024 – செவ்வாய்

திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (1767 – 1848) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். இவர் `தியாக பிரம்மம்’ என்று போற்றப்படுபவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர், ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர். இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி, இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர், அரசவைக்கு செல்ல மறுத்து ‘‘நிதிசால சுகமா’’ என்ற கல்யாணி ராகக் கிருதியைப் பாடினார். ராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.

“ஏல நீ தயராது” கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப் படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்ய நாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாகத் தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் இசைவாணர்களால் இன்றளவும் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா திருவையாறில் எதிர்வரும் 2024 ஜனவரி 26 தொடங்கி, 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நிறைவுநாள். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாள். இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி,  தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்துவர்.

கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
31.1.2024 – புதன்

கூரேசர் எனப்படும் கூரத்தாழ்வார், காஞ்சிக்கு வடமேற்கே சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ள கூரம் என்னும் ஊரில், ஹாரீதகோத்ரம், வடமான் குலத்தைச் சேர்ந்த அனந்தர், பெருந்தேவி நாயகி தம்பதியருக்குப் பிறந்தார்.

இவர் ராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், தைத்திங்கள், அஸ்த நட்சத்திரம், தேய்பிறை, பஞ்சமி திதி, வியாழனன்று அவதரித்தார். கூரேசர், ஞானத்திலும் நற்பண்பிலும் நினைவாற்றலிலும் தலைசிறந்தவர். இல்லறப் பற்றற்ற இவர் தமது திருமாளிகையில் இரவுபகலாக அன்னதான சத்திரம் நடத்தியதால், அதன் கதவு “அடையா நெடுங்கதவு” என்று அறியப்பட்டது.

கூரேசரோடு ஒப்பிட்டுச் சொல்ல முன்னும் பின்னும் பக்தர்கள் எவரும் இலர். பகவத் பக்தி, பாகவத பக்தி, ஆச்சாரிய அபிமானம், பௌதிகப் பொருட்களிலும் இல்வாழ்விலும் பற்றின்மை, ஒளிவிடும் புலமை, ஒப்பற்ற நினைவாற்றல், அன்பு, அடக்கம், கருணை போன்ற பல நல்ல குணங்கள் அவருக்கு அழகூட்டும் அணிகலன்களாக இருந்தன.

கூரத்தாழ்வார் திருமாலிருஞ்சோலைச் செல்லும் வழியில், ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதி மானுஷ ஸ்தவம் ஆகிய சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட அரிய நூல்களை அருளினார். மேலும், ஸ்ரீஸ்தவம், ஸ்ரீ-சுந்தர பாஹு ஸ்தவம், காஞ்சி வரதரை பிரார்த்தித்து ஸ்ரீவரதராஜ ஸ்தவம் ஆகிய நூல்களையும் அருளினார். இந்த ஐந்து நூல்களும் பஞ்ச ஸ்தவங்கள் என்று புகழ்பெற்றன. அவை மட்டுமின்றி, அபிக மனஸாரம், புருஷ-ஷுக்த பாஷ்யம், ஸாரீரக ஸாரம் ஆகிய நூல்களையும் அருளி கூரத்தாழ்வார் வைஷ்ணவ உலகிற்குத் தொண்டாற்றினார். அவர் அவதார நாள் இன்று.

தொகுப்பு: தொகுப்புவிஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: