பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

ஈரோடு, ஜன. 25: பெருந்துறை ரோட்டில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, வரி செலுத்துவோர் சங்கத்தின் செயலாளர் பாரதி, மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாநகராட்சி 2வது மண்டலம், வார்டு எண் 20க்கு உட்பட்ட பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை (ஈரோடு மெடிக்கல் சென்டர்) அருகில் பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 16ம் தேதி இந்த அடைப்பை சரி செய்ய வந்தவர்கள் அதை முறையாக செய்யாததால் மீண்டும் 18ம் தேதி பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக மேற்கொள்ளும் பணியால் இவ்வாறு தொடர்ந்து அடைப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து, பணிகளை கண்காணித்து பாதாளச் சாக்கடை அடைப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிகை எடுக்க வேண்டும். இதேபோல, அதே பகுதியில் உள்ள (ரிலையன்ஸ்) மால் எதிரிலும், பாதாளச் சாக்கடை 3 முறை அடைத்து கொண்டது.

2 முறை அதை சரி செய்தும், மீண்டும் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவு நீரும், நடு‌ரோட்டில் வெளியேறி வருகிறது. எனவே, தொடரும் பாதாளச் சாக்கடை அடைப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

The post பாதாள சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: