மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், ‘தகுதிநிலை: வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவிடம் பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரெங்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஆஸி. ஓபன் தகுதிச்சுற்றில் விளையாடி வென்று முதன்மை சுற்றுக்கு முன்னேறி இருந்த டயானா (23 வயது, 93வது ரேங்க்) தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து அசத்தி வருகிறார். காலிறுதிக்கு முந்தய சுற்றில் அசரெங்காவுடன் (34 வயது, 22வது ரேங்க்) நேற்று மோதிய டயானா 7-6 (8-6), 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 2 மணி, 7 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
சீனாவின் கின்வென் ஸெங், அன்னா கலின்ஸ்கயா (ரஷ்யா), லிண்டா நோஸ்கோவா (செக்.) ஆகியோரும் 4வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் முன்னணி வீரர்கள் டானில் மெத்வதேவ் (ரஷ்யா), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். 4வது சுற்றில் இங்கிலாந்தின் கேமரான் நோர்ரியுடன் மோதிய ஸ்வெரவ் 7-5, 3-6, 6-4, 4-6, 7-6 (10-3) என 5 செட்களில் 4 மணி, 5 நிமிடம் கடுமையாகப் போராடி வென்றது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) ஜோடி 7-6 (10-8), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹாப் – நிகோலா மெக்டிச் (குரோஷியா) இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
The post தகுதிநிலை’ டயானாவிடம் அசரெங்கா அதிர்ச்சி தோல்வி: காலிறுதியில் போபண்ணா ஜோடி appeared first on Dinakaran.