வரிப்பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில வரி விதிப்பு உரிமை பறிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சேலம் திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் ‘நிதித்துறையில் மாநில உரிமைகள் பறிப்பு’ என்ற தலைப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழ்நாடு வளம் நிறைந்த நாடு. கல்வியில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் இந்தியாவில் 2ம் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு ரூ.24 லட்சம் கோடி பொருளாதாரம் ஈட்டும் மாநிலமாக உள்ளது. ளாதாரம் நிறைந்த மாநிலத்தை, ஒன்றிய அரசு ஊக்குவிக்கவில்லை. ஜிஎஸ்டி வந்த பிறகு வரி விதிப்பு உரிமை, மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு கொடுக்கும் வருவாய் ரூ.6.50 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் வரிப்பகிர்வாக தருவது, வெறும் ரூ.2.50 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், பாஜ ஆளும் உத்தரபிரதேசம் மாநிலம் ரூ.2.70 லட்சம் கோடி மட்டுமே தருகிறது. அவர்களுக்கு வரிப்பகிர்வாக ரூ.11 லட்சம் கோடியை ஒன்றிய அரசு தருகிறது. 12வது நிதிக்குழுவில் 24 சதவீதம் என்ற வரிப்பகிர்வை, 15வது நிதிக்குழுவில் 4 சதவீதம் என்று ஒன்றிய அரசு குறைத்துவிட்டது. இதேபோல் திட்டங்களுக்கான நிதியையும் முறையாக தருவதில்லை.

ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து நடத்தும் சென்னை மெட்ரோ திட்டத்திற்கு இதுவரை உரிய நிதியை தரவில்லை. ஆனால் மகாராஷ்டிரா மெட்ரோ திட்டத்திற்கு ரூ.28 ஆயிரம் கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.17,500 கோடியும், அரியானாவிற்கு ரூ.13 ஆயிரம் கோடியும், குஜராத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் ரூ.3,023 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்றிய அரசுக்கு 10 ரூபாய் கொடுத்தால், அவர்கள் 29 பைசா மட்டுமே நமக்கான வரிப்பகிர்வாக தருகின்றனர். தற்போது புயல், மழை பாதிப்புகளை சீரமைக்க ரூ.22 ஆயிரம் கோடி நிதி கேட்டோம். தரவில்லை. தற்காலிகமாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டோம். அதையும் தரவில்லை. உடனடி நிவாரணம் வழங்க குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் கோடியாவது தர வேண்டும் என்றோம். அதையும் தரவில்லை. மகாபாரத கதையில், பாண்டவர்கள் கேட்ட நிலத்தை கவுரவர்கள் கொடுக்காததால் போர் மூண்டது. குருஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். இதேபோல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் முதல்வரின் சங்க நாதமும், உதயநிதியின் காண்டீபமும் நம்மை புறந்தள்ளும் ஒன்றிய அரசுக்கு உரிய பாடம் புகட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post வரிப்பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில வரி விதிப்பு உரிமை பறிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: