பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம்: கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

 

ஈரோடு, ஜன.20: குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இணைப்பு இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பாண்டியாறு மோயாறு இணைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களை செழிக்க வைக்கும் வகையிலும், பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும் 1965ம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டு வரும் பாண்டியாறு புன்னம்புழா திட்டம் என்று அழைக்கப்படும் பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம் என்பது கனவாகவே இருந்து வருகின்றது.

நீலகிரி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் பாண்டியாறு எவ்வித பாசனத்திட்டமும் இல்லாததால் கேரள மாநிலத்தில் நுழைந்து, அரபிக்கடலில் வீணாக கலந்து வருகின்றது. பவானிசாகர் அணையின் நீர் ஆதரமாக உள்ள மோயாற்றில் பாண்டியாற்று தண்ணீரை திருப்பி விடுவதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இதன் மூலம் கடலில் கலக்கும் 20 டிஎம்சி தண்ணீரில் சுமார் 10 டிஎம்சி தண்ணீர் பவானிசாகர் அணைக்கு கிடைக்கும். இத்திட்டம் தொடர்பாக தமிழகம் கேரளா அரசுகளுக்கு இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது என்பது காலத்தின் கட்டா யமாக உள்ளது.

தற்போதைய சூழலில் தமிழக-கேரளா அரசுகளுக் கிடையே சுமூகமான நட்புணர்வு உள்ள நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது என்பது சாத்தியமான ஒன்றாகும். எனவே, இத்திட்டத்தினால் பயன்பெற உள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் வருகின்ற 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாண்டியாறு மோயாறு இணைப்பு திட்டம்: கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: