மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஒரே நாளில் 1.50 லட்சம் பக்தர்கள் இருமுடி செலுத்தினர்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழாவையொட்டி இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா கடந்த 1ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இருமுடி விழாவிற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இருமுடி அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு ரயில், விமானம், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தி வருகின்றனர்.

இருமுடி விழா 24ம்தேதி வரை நடக்கிறது. ஜனவரி 25ம்தேதி ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தைப்பூச ஜோதி ஏற்றப்பட உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விழாவை யொட்டி தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று மட்டும் 1.50 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இருமுடி செலுத்தினர். இருமுடி செலுத்திய பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கடந்த 42 தினங்களாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 22 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு இருமுடி செலுத்தினர். வரும் 24ம்தேதி வரை பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி செலுத்த உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார். துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், தேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன், லேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் மேற்பார்வையில் ஆன்மிக இயக்கத்தினர் செய்திருந்தனர்.

 

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஒரே நாளில் 1.50 லட்சம் பக்தர்கள் இருமுடி செலுத்தினர் appeared first on Dinakaran.

Related Stories: