ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு மதுரையில் வாடகை கட்டிடம்: திருமங்கலம் ஜி.ஹெச்சில் பயிற்சி வகுப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை தோப்பூரில் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி 5 வருடங்கள் ஆக உள்ள நிலையில் சுற்றுச்சுவர் கட்டுமானம், தற்காலிக நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை மட்டும் கட்டப்பட்டுள்ளது. தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர். ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் இருந்து மதுரை அருகேயுள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எனவே, திருமங்கலம் அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள 10 கிமீதூரத்திற்குள் மாணவர்கள் தங்கி படிக்க தேவையான அனைத்து வசதிகளுடனும் கூடிய தற்காலிக கல்லூரி வளாகத்தை வாடகைக்கு எடுக்க எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து 50 பேர் அமரக்கூடிய வகையில் 2 வகுப்பறைகள், ஒரு பயிற்சி கூடம், 50 பேர் அமரும் வகையில் ஒரு தேர்வறை, 1,000 சதுர அடியில் ஒரு ஆய்வகம், 1,000 சதுர அடியில் ஒரு கம்ப்யூட்டர் லேப், 500 சதுர அடியில் 6 எண்ணிக்கையில் ஆசிரியர் அறை, நிர்வாக அலுவலகம், 37 அறைகள் கொண்ட ஆண்கள் விடுதி, 21 அறைகள் கொண்ட பெண்கள் விடுதி, கழிப்பிடம், குளியல் அறை வசதி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய வசதிகள் அடங்கிய தற்காலிக கல்லூரி வளாகத்திற்கு வாடகைக்கான டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வரும் 18ம் தேதிக்குள் டெண்டரில் பங்கேற்க விரும்புவோர் தங்களது விபரங்களை அனுப்பி வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வரும் கல்வியாண்டு முதல் எய்ம்ஸ் மதுரையில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு மதுரையில் வாடகை கட்டிடம்: திருமங்கலம் ஜி.ஹெச்சில் பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: