பாஜ கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டிடிவி.தினகரன் சிவகங்கையில் ஓபிஎஸ் மகன் போட்டி

சென்னை: வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டி.டி.வி.தினகரன், சிவகங்கையில் ஓ.பி.எஸ்.மகன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜ கூட்டணியில் இதற்கான உடன்பாடு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தையை கட்சிகள் தொடங்க உள்ளன. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் இருந்த பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. கூட்டணியில் இருந்த பாமக வெளியேறிவிட்டது. கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற்றப்பட்டு விட்டது. பாஜவுடன் ஒரு போதும் அதிமுக கூட்டணி அமைக்காது என்று பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதனால், அதிமுகவில் பாஜ மீண்டும் இணைய வாய்ப்பு இல்லை. இதனால், வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ தனித்து போட்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் சிறிய கட்சிகளை ஒன்றிணைந்து 3வது அணி அமைத்து போட்டியிடலாம் என்று பாஜ தலைவர் அண்ணாமலை கருதுகிறார்.

இதற்கான வேலைகளில் பாஜ இறங்கியுள்ளது. இதற்கிடையில் பாஜ கூட்டணியில் தொடர்வதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் டி.டி.வி.தினகரனும் பாஜவுடன் இணைந்து போட்டியிடுவதை விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த முறை எப்படியாவது தேர்தலில் நிற்க வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர் தேனி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஏனென்றால் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் தான் முதல் முறையாக 1998ல் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2004ல் நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். இருந்த போதும் டி.டி.வி.தினகரன் மீது ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கையால் அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் 2017 டிசம்பரில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். இதில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளரை விட சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் 89,063 வாக்குககள் பெற்று வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

2018, மார்ச் 15ல் அமமுக என்ற புதிய கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். தொடர்ந்து அவர் 2021ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்து வருகிறார். அதனால், தான் முதன் முதலாக போட்டியிட்ட தேனி தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த தொகுதியை பாஜ ஒதுக்கியது.

ஏற்கனவே இந்த தொகுதியில் எம்பியாக உள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அந்த தொகுதியில் எதுவும் செய்யவில்லை என்று மக்கள் குமுறி வருகின்றனர். இதனால், இந்த முறை அவர் தேர்தலில் நின்றால் தோற்க வேண்டியது வரும். இதனால், அவர் அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. இதனால், அவர் தனது சாதி ஒட்டுக்கள் அதிகமாக உள்ள சிவகங்கையில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பாஜ கூட்டணியில் ஓபிஎஸ் அணிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற தொகுதிகளில் இந்த 2 பேரின் ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post பாஜ கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டிடிவி.தினகரன் சிவகங்கையில் ஓபிஎஸ் மகன் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: