வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி கலெக்டர்களுடன் ஆலோசனை

சென்னை: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்தது. தொடர்ந்து அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும், 39 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள பாதுகாப்பு அறையில் அவை 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த் உடனிருந்தனர். இதில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, வாக்கு எண்ணிக்கை தகவல்களை உரிய மென்பொருள் உரிய நேரத்தில் செயலிகளில் பதிவேற்றம் செய்வது, வாக்கு எண்ணிக்கை பணிகளை ‘வெப் காஸ்டிங்’ மூலம் ஒளிபரப்பு செய்வது, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் வெளியிடுவது, தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக பணியாளர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

The post வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி கலெக்டர்களுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: