‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’ பெண் போலீசுக்கு டார்ச்சர் போலீஸ்காரர் மீது புகார்

சேலம்: சேலம் மாவட்ட பெண் போலீசுக்கு, தஞ்சாவூர் மன்னார்குடியில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவர், சேலம் சரக டிஐஜி உமாவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 7ம்தேதி இரவு எனது செல்போன் எண்ணுக்கு மிஸ்டுகால் வந்தது.

அந்த செல்போன் எண்ணுக்கு நான் அழைத்தேன். எதிர்முனையில் பேசியவர் மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் என்பது தெரியவந்தது. நான் அங்கு பணியாற்றியபோது, அவருக்கும் எனக்கும் வேலை தொடர்பான பழக்கம் மட்டும் உண்டு. ஆனால் அவர் அன்று பேசியது எனக்கு பெருத்த அதிர்ச்சியை அளித்தது. அவர், ‘நான் உனது மாமா. நீ இங்கு இருக்கிறபோது உன்னை அடையாமல் விட்டுவிட்டேன். இப்போது நீ எனக்கு வேண்டும்.

அதனால் துறைரீதியான வேலை இருப்பதாக கூறிவிட்டு திருவாரூர் வந்துவிடு. நான் வந்து அழைத்துச் சென்று எனது ஆசையை தீர்த்துக்கொள்கிறேன். இல்லை என்றால் உன்னை நிம்மதியாக சேலத்தில் வாழ விடமாட்டேன். நான் கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’ என கூறிய அவர் உடல் அங்கங்களை வர்ணித்தார். அவரை கண்டித்த நான், மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கும் வகையில் பேசினேன்.

ஆனால் அங்கிருந்தவர்கள் டிஎஸ்பியின் செல்போன் நம்பரை தரமறுத்துவிட்டனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் எஸ்.பிக்கு சேலம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸ்காரருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’ பெண் போலீசுக்கு டார்ச்சர் போலீஸ்காரர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: