கடன் தொல்லையால் 5 உயிர்கள் பறிபோன சோகம் மகன், மகள், மூன்று மாத பேத்தியை கொன்று ஆசிரியர் தம்பதி தற்கொலை: சிவகாசி அருகே பரிதாபம்

சிவகாசி: சிவகாசி அருகே கடன் தொல்லையால் 3 மாத பேத்தி, மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, ஆசிரியர் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்தவர் லிங்கம் (43). மனைவி பழனியம்மாள்(47). அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இவர்களது மகன் ஆதித்யா (15). பழனியம்மாளின் முதல் கணவர் இறந்துவிட்டதால் லிங்கத்தை 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவருக்கு பிறந்த மகள் ஆனந்தவள்ளி (24), திருமணமாகி சென்னையில் வசித்து வந்தார். பிரசவத்துக்காக திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் இவருக்கு சஷ்டிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. தம்பதியர் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தாலும் அதிகளவில் கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 20க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி அதற்கு அதிகளவில் வட்டியும் கட்டி வந்துள்ளனர்.

கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் மே 23ம் தேதி (நேற்று) அனைவருக்கும் பணத்தை கொடுத்து செட்டில் செய்து விடுவதாக உறுதி அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணி வரை இவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் யாரும் வெளியே வரவில்லை. இதையடுத்து திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கு தனித்தனி அறைகளில் ஆசிரியர் லிங்கமும், அவரது மனைவி பழனியம்மாளும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் ஆனந்தவள்ளி, அவரது 3 மாத குழந்தை சஷ்டிகா, தம்பி ஆதித்யா ஆகியோர் பிணமாக கிடந்தனர். 5 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக ஆசிரியர்கள் லிங்கம், பழனியம்மாள் இருவரும் தற்கொலை செய்ய கொள்ள முடிவு செய்துள்ளனர். பின்னர் மகள், மகன், பேத்திக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு இருவரும் தனித்தனி அறைகளில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் திருத்தங்கல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கடன் தொல்லையால் 5 உயிர்கள் பறிபோன சோகம் மகன், மகள், மூன்று மாத பேத்தியை கொன்று ஆசிரியர் தம்பதி தற்கொலை: சிவகாசி அருகே பரிதாபம் appeared first on Dinakaran.

Related Stories: