ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கும் நேரம் மாறுகிறது: மதியம் கடை மூடும் நேரம் குறைக்க முடிவு

சென்னை: ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கும் நேரம் மாறுகிறது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த கடைகள் சென்னை மற்றும் புறநகரில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் புறநகரில் மதியம் ரேஷன் கடைகளை மூடி மீண்டும் திறப்பதற்கு 2.30 மணி நேரம் இடைவெளி வழங்கப்படுகிறது. அந்த சமயத்தில்தான், கார்டுதாரர்கள் வாங்காத பொருட்களை சில ஊழியர்கள் கடைக்கு வெளியே அனுப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவதாக, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உயர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கடைகள் மதியம் மூடப்படும் நேரத்தை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், கிடங்குகளில் இருந்து பொருட்களை நகர்வு செய்து கடைகளுக்குக் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் கே.கோபால் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அனைத்து கூட்டுறவு சார்பதிவாளர்களும் தங்களது வட்டாரங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அவ்வப்போது தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும்.

ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு திறந்து மாலை 6 மணியளவில் மூடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். இந்தச் செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன.

அத்துடன் அபராதத் தொகையும் சொற்ப அளவே வசூலிக்கப்படுகிறது. எனவே, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அனைவரும் ரேஷன் கடைகளை முறையாக ஆய்வு செய்வதுடன் தவறில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கூடுதலான அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் வழங்கும் நேரம் மாறுகிறது: மதியம் கடை மூடும் நேரம் குறைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: