வங்கதேச தேர்தலில் அபார வெற்றி 5வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார் ஷேக்ஹசீனா

டாக்கா: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால், மற்ற 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வீட்டுச் சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் ‘வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி)’ உள்பட 15 எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. அதனால் 41.8 சதவீத வாக்குகளே பதிவாகின. வாக்குப் பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது.

தேர்தல் முடிவுகளில் அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (76) அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அவாமி லீக் கட்சி மட்டும் 223 இடங்களில் வெற்றி பெற்றது. ஜதியா கட்சி 11 இடங்களிலும், வங்கதேச கல்யாண் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 62 இடத்திலும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் வங்கதேசத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பிஎன்பி தேர்தலை புறக்கணித்ததால் அவாமி லீக் பெரும்பாலான இடங்களை கடும் போட்டியின்றி வென்றது. இந்த தேர்தல் டம்மி தேர்தல், அதை ஏற்க முடியாது. புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

* பிரதமர் மோடி வாழ்த்து
தேர்தலில் வெற்றி பெற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் பேசினேன். தொடர்ந்து நான்காவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக வங்காளதேச மக்களையும் நான் வாழ்த்துகிறேன். வங்கதேசத்துடனான நமது நீடித்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதர் பிரணாய்குமார் வர்மா சந்தித்து வாழ்த்தினார். அப்போது வங்கதேசத்தில் நல்ல நட்பு நாடு இந்தியா என்று ஷேக் ஹசீனா புகழாரம் சூட்டினார்.

* வங்கதேச கிரிக்கெட் கேப்டன் வெற்றி
வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் மகுரா வடக்கு தொகுதியில் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை வாழ்த்த ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். அப்போது அவரிடம் அத்துமீறிய ஒருவரை கன்னத்தில் ஷகிப் அல் ஹசன் அறைந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post வங்கதேச தேர்தலில் அபார வெற்றி 5வது முறை பிரதமராக பதவி ஏற்கிறார் ஷேக்ஹசீனா appeared first on Dinakaran.

Related Stories: