உச்சிப்புளி நகர் பகுதியில் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

மண்டபம்,ஜன.8: உச்சிப்புளி நகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான மழைநீர் தேக்கம் உள்ள தாமரை குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான உச்சிப்புளி நகர் பகுதியில் தாமரைக்குளம் அமைந்துள்ளது. இந்த தாமரை குளத்தில் ஆண்டுதோறும் பெய்யும் மழையால் மழைநீர் தேங்கும். ஆதலால் ஆண்டுதோறும் வற்றாத ஒரு குளமாகவும் இந்த தாமரை குளம் அமைந்துள்ளது.

இந்த தாமரை குளத்தைச் சுற்றி ஒரு பக்கம் தேசிய நெடுஞ்சாலையும், இன்னொரு பக்கம் ரயில்வே நிலையத்துக்கு செல்லும் சாலையும் அமைந்துள்ளது. அதுபோல குளத்தைச் சுற்றி கரையோரங்களில் பொதுமக்கள் கடைகள் அமைத்து தற்காலிக வியாபாரமும் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேக்கமடைந்த மழைநீரை பாதுகாக்க வேண்டும். அதுபோல கால்நடைகள் ஏதும் தண்ணீர் குடிக்க குளத்திற்குள் சென்று உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதுபோல நீர் வளத்தை பாதுகாக்க குளத்தை சுற்றி அமைந்துள்ள கருவேலம் மரங்களை அகற்றிட வேண்டும். இந்த தாமரை குளத்தை பாதுகாக்க குளத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டி கம்பி வேலி அடைத்து பாதுகாக்க என் மனங்கொண்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உச்சிப்புளி நகர் பகுதியில் குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: