ஜன.22ல் கும்பாபிஷேகம்; அயோத்திக்கு செல்லவில்லை: நாசிக் செல்கிறார் உத்தவ்

மும்பை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உத்தவ் தாக்கரேவுக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலுக்கு செல்ல உள்ளதாக அறிவித்தார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தாயார் மீனா தாக்கரே பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு உத்தவ் தாக்கரே கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் பெருமை மற்றும் சுயமரியாதைக்குரிய விஷயம். கும்பாபிஷேகவிழாவில் பங்கேற்க எனக்கு இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அன்று நான் அங்கு செல்லவில்லை. அயோத்திக்குச் செல்ல எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. நான் எப்போது நினைத்தாலும் அயோத்தி செல்வேன். ராமர் கோயில் இயக்கத்திற்கு சிவசேனா நிறைய பங்களித்தது.

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடக்கும் அன்று அம்பேத்கரும், சமூக சீர்திருத்தவாதி சானே குருஜியும் போராட்டங்களை நடத்திய காலாராம் கோவிலுக்கு மாலை 6.30 மணிக்கு எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் செல்வோம். அங்கு இரவு 7.30 மணிக்கு கோதாவரி நதிக்கரையில் மகா ஆரத்தி நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். நாசிக்கின் பஞ்சவடி பகுதியில் ராமர் வனவாசத்தின் போது மனைவி சீதா மற்றும் அவரது சகோதரர் லட்சுமணனுடன் தங்கியதாக நம்பப்படுகிறது. 1930ம் ஆண்டு, டாக்டர் அம்பேத்கர் தலைமையில் தலித்துகள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக் கோரி காலாராம் கோவிலில் போராட்டம் நடத்தினார்.

The post ஜன.22ல் கும்பாபிஷேகம்; அயோத்திக்கு செல்லவில்லை: நாசிக் செல்கிறார் உத்தவ் appeared first on Dinakaran.

Related Stories: