மாவட்ட காவல்துறை சார்பில் கேர்மாளம் மலைப்பகுதியில் வனப்பொங்கல் விழா

 

சத்தியமங்கலம், ஜன.6: ஈரோடு மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தும் பொருட்டு கேர்மாளம் மலைப்பகுதியில் உள்ள பூதாளபுரம் அரசு பள்ளி வளாகத்தில் காவல்துறை, மாவோயிஸ்ட் சிறப்பு தனி பிரிவு,வனத்துறை, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய வனப் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பூதாளபுரம்,ஒரத்தி,உருளிக்குட்டை,குட்டைதொட்டி ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் மலை கிராம மக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மலை கிராம மக்களுக்கு பாத்திரங்கள்,மளிகை சாமான்கள்,வேஷ்டி,சேலைகள்,பாய் தலையணை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மலை கிராம மக்களிடையே நக்சல் நடமாட்டம், மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு,போதைப் பொருள் விழிப்புணர்வு,மலைவாழ் மக்களுக்கு கல்வியின் அவசியம் குறித்தும்,மலைவாழ் மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்தும், வனவிலங்கு மனித மோதல் தவிர்ப்பது குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகள் பேசினர். இதைத் தொடர்ந்து கானக்கரை மலை கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பென்சில், பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினர், வனத்துறையினர், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட காவல்துறை சார்பில் கேர்மாளம் மலைப்பகுதியில் வனப்பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: