“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் திறந்து வைக்கப்பட்ட “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” இன்று (4.1.2024) மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு, இம்முணையத்தில் பயணிகள் சுலபமாக செல்வதற்காக MTC மற்றும் SETC இடையே இணைப்புப் பாதை அமைப்பது குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல ஊர்தியில் Wheel Chairs அமைப்பது குறித்தும், பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். இப்பேருந்து முனையத்தை முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருவோம் என கூறினார்.

அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” தமிழ்நாடு முதலமைச்சர் 30.12.2023 அன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள். 6வது நாளான இன்று (4.1.2024) கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தினம்தோறும் 5,000-க்கும் மேற்பட்ட பயணிகள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தினந்தோறும் துறையினுடைய செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் முனைவர்.அமல்ராஜ் இ.கா.ப. ஆகியோர் இப்பேருந்து முனையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், பயணிகளிடம் கேட்டறிந்து, தேவைகளை பூர்த்தி செய்கின்ற பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.

88.56 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இந்த பேருந்து முனையமானது இந்தியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து முனையம் திட்டமிடப்பட்ட காலத்திற்கும் தற்போது இந்த பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்த காலத்திற்கும் பார்த்தால் போக்குவரத்து அதிகமாக இருப்பதை நாம் கணக்கிட்டு சொல்ல முடியும். அன்றைய காலகட்டத்தில் இதை திட்டமிடுகின்ற பொழுது அடுத்த ஒரு 50 ஆண்டுகளுக்கு தேவையான அளவிற்கு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால் 2013-ம் ஆண்டு பேருந்து முனையம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்ட நிலையில் 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டு 2019-ம் ஆண்டு துவக்கப்பட்டு இருந்தாலும் பணிகள் 30% அளவுக்குத்தான் நிறைவுற்று இருந்தது. மீதமுள்ள பணிகளையும். தேவையான பல்வேறு பயணிகளுக்கு தேவைப்படுகின்ற அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கி இருந்தோம்.

இப்பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு சிறிய சிறிய பிரச்சனைகள் கவனத்திற்கு வந்தவுடன் அவைகளை முழு வீச்சில் நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதற்கிணங்க, தொடர்ந்து இது போன்ற ஆய்வுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் நேற்று சர்வீஸ் ரோடு எனப்படுகின்ற அந்த சாலையில் சங்கர வித்யாலயா என்ற பள்ளிக்குச் செல்பவர்கள் எதிர்ப்புறமாக அந்த பள்ளிக்கு செல்வதற்கு பாதையை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்தபிறகு அந்த சாலையின் வழியாக பேருந்துகள் வருவதால் இடையூறு இருப்பதாக பெற்றோர்கள் எடுத்துக் கூறியதற்கிணங்க தற்காலிகமாக பள்ளிக்கு பின்புறம் இருக்கின்ற ஒரு வழியை ஏற்படுத்தி தரவும், அதேபோல் பள்ளியினுடைய காலை நேரம் மாலை நேரத்தில் அந்த பாதையில் பேருந்துகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் தற்போது முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.

அதே போல அருகாமையிலேயே இருக்கின்ற ஆதி திராவிடர் பள்ளி, அந்த பள்ளியிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் படித்து வருகின்றார்கள். அந்தப் பள்ளியும் இந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகள் வருவதால் இடையூறு இருப்பதாக கவனத்திற்கு வந்திருக்கிறது. அதற்கும் மாற்று ஏற்பாடாக பள்ளியை ஒட்டி பின்புற வழியை பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தந்து வருங்காலத்தில் அந்த பள்ளியை வேறு இடத்திற்கு புதிய கட்டுமானத்தை ஏற்படுத்தி பள்ளியினுடைய இடத்தை மாற்றுவதற்கு இன்றைக்கு திட்டமிட்டு இருக்கிறோம்.

அதேபோல் மாநகர பேருந்துகள் வருகின்ற இடத்தில் MTC பேருந்துகளில் இருந்து இறங்கி SETC பஸ்ஸில் பயணம் செய்வதற்குண்டான தூரம் அதிகமாக இருப்பதை கணக்கிட்டு கூடுதலாக மூன்று பேட்டரி கார்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஒன்று மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான வசதி பொருந்திய பேட்டரி கார் வாங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் MTC பேருந்து நிலையத்திலிருந்து SETC பேருந்து முனையத்திற்கு வருவதற்கு பாதைகளில் இடையிலே இருக்கின்ற இரண்டு சுவர்களை அகற்ற வேண்டும் என்று ஊடகங்கள் தெரிவித்து இருந்தது.

அந்த ஒரு சுவற்றை அகற்றி விட்டு அதற்கு படிக்கட்டுகளும், சாய்வுதளமும் அமைப்பதற்குண்டான பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. மேலும், இன்று நடைபெற்ற கள ஆய்வில் மற்றொரு இடத்தில் சுவற்றையும் அகற்றினால் பயணிகள் எளிதாக வருவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று அலுவலர்கள் எடுத்துக் கூறினார்கள் அதையும் அகற்றி விட்டு அதில் படிக்கட்டுகளை அமைத்து சுலபமாக MTC பேருந்து நிலையத்திலிருந்து SETC பேருந்து முனையத்திற்கு வருவதற்கான ஏற்பாடுகள் அமைக்கப்படவுள்ளன. நாங்கள் இன்று ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 20 யூனிட்டுகள் கொண்ட 524-க்கும் மேற்பட்ட பொதுக்கழிப்பிடங்கள் முழுமையாக பயன்பாட்டில் இருக்கின்றன. அதேபோல் குடிநீருக்காக அமைக்கப்பட்டு இருக்கின்ற அனைத்து குழாய்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

அதேபோல். 6,50,000 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கின்ற இந்த இந்த முனையக் கட்டிடத்தில் எங்கும் ஒரு இடத்தில் கூட குப்பைகள் இல்லை. அடுத்து முழுவதுமாக பராமரிப்பில் சுத்தமாக இருக்கின்றது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைய இருக்கின்ற தொல்லியல் அறிவுசார் மையம் மற்றும் காலநிலை பூங்காவும் பிப்ரவரி 2024-க்குள் பயன்பாட்டிற்கு வருவதற்குண்டான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருக்கின்றோம். அதேபோல 6 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டிருக்கின்ற நீருற்றுடன் கூடிய பூங்காவை வெகு விரைவில் திறப்பதற்குண்டான ஆய்வையும் இன்றைக்கு மேற்கொண்டு இருக்கின்றோம். அதோடு மட்டும் இல்லாமல் பயணிகளிடையே பாதுகாப்பிற்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆண்டு இங்கே காவல் நிலையம் அமைப்பதற்கு அறிவித்து இருக்கிறார்கள்.

அந்த காவல் நிலைய கட்டுமானப் பணியும் இந்த பொங்கல் முடிந்தவுடன் துவக்குவதற்குண்டான ஆய்வினையும் இன்றைக்கு மேற்கொண்டு இருக்கின்றோம். அதேபோல் முகப்பில் அமைக்கப்பட இருக்கின்ற ஒரு வளைவு (ARCH) அதையும் விரைவுபடுத்தி இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய இருக்கின்றோம்.

குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அமைய இருக்கின்ற புதிய ரயில் நிலையம். அந்த ரயில் நிலையத்தின் பணிகளை வேகப்படுத்துவதற்கு 20 கோடி ரூபாயை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் முதலமைச்சரின் உத்தரவிற்கேற்ப வழங்கியிருக்கின்றோம். அந்த பணிகளுக்கு உண்டான ஒப்பந்தம் கோரப்படுகின்ற பணிகளையும் அந்த பணிகளை விரைவுபடுத்துவதற்கு ரயில்வே துறையுடன் நம்முடைய துறையினுடைய செயலாளர், உறுப்பினர், செயலாளர் கலந்தாய்வு கூட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

அங்கே அமைக்கப்படுகின்ற ஸ்கைவாக் பணிகளையும். விரைவுபடுத்துவதற்குண்டான பல்வேறு திட்டங்களை இன்றைக்கு இந்த ஆய்வுக்கூட்டத்தில் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். அதேபோல் இது எட்டு வழிச்சாலை என்பதால் மக்கள் வருங்காலங்களில் பேருந்து முனையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது எந்த வகையில் சாலையை கடக்க வேண்டும் என்று. முயற்சிப்பவர்களுக்கு எந்த வகையிலும் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக ஒரு நடை மேம்பாலத்தை அமைப்பதற்கும் இன்றைய ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கின்றோம்.

அதேபோல் ஆம்னி பேருந்துகளுக்கு முடிச்சூரில் கட்டப்பட்டு கொண்டிருக்கின்ற ஆம்னி பேருந்து நிறுத்தும் இடத்தை (Omni Bus Parking) விரைவாக முடிப்பதற்கு மார்ச் மாதத்திற்குள் அந்தப் பணிகளை முடித்து ஆம்னி பேருந்துகள் அங்கு நின்று வருவதற்கு ஏற்பாடுகளை விரைந்து செய்வதற்கும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி வாரம் தோறும் இரண்டு நாட்களாவது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினுடைய தேவைகளை அறிந்து முழுமையாக இந்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் படிப்படியாக நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., , சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப.,தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர்/கூடுதல் தலைமை இயக்குநர் முனைவர். அ.அமல்ராஜ், இ.கா.ப., சி.எம்.டி.ஏ. முதன்மை செயல் அலுவலர் ப.காயத்ரி கிருஷ்ணன், இ.ஆ.ப., காவல் துணை ஆணையர்கள் (தாம்பரம் சட்டம் & ஒழுங்கு) பவன் குமார், இ.கா.ப., (போக்குவரத்து) ந.குமார், தலைமைத் திட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மு.இந்துமதி, நா.அங்கையர்கண்ணி, SETC பொது மேலாளர் குணசேகரன், செயற்பொறியாளர்கள் ராஜன் பாபு, பாலமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” முழுமையாக மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: