பிரதமர் மோடி செல்ஃபி பூத் சர்ச்சை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க ரயில்வே கட்டுப்பாடு விதிப்பு!!

டெல்லி: பிரதமர் மோடி உருவத்துடன் கூடிய செல்ஃபி மையத்திற்கான செலவு குறித்து தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்க ரயில்வே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் சந்திரயான் போன்ற திட்டங்கள் குறித்து சித்தரிப்புகள் அருகே படத்துடன் செல்ஃபி எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் முன்னாள் ரயில்வே ஊழியர் அஜய் போஸ் கேட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அனுப்பிய பதிலில் ரூ.1.62 கோடி செலவில் ஒரு செல்ஃபி மையம் அமைக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.

அதே வேளையில் பிரதமர் உருவத்துடன் நிரந்தர செல்ஃபி மையம் அமைக்க ரூ.6.25 லட்சம் மற்றும் தற்காலிக செல்ஃபி மையத்திற்கு ரூ.1.25 லட்சம் செலவழிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே பதில் அனுப்பியிருந்தது. இந்த தொகை வேறுபாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. தகவலை துணை பொது மேலாளர் பகிர்ந்த நிலையில், அவரது மேலதிகாரியான மக்கள் தொடர்பு அலுவலர் சிவ்ராஜ் மனஸ்பூர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த பதவி காலம் 2 ஆண்டு என்ற நிலையில் 7 மாதங்களிலேயே அவர் மாற்றப்பட்டது குறித்து உண்மைக்கு அரசர் தண்டனை கொடுத்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், மண்டல பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் கடிதத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மண்டல ரயில்வே அலுவலகங்கள் மற்றும் பிற அலகுகள் வழங்கும் பதில்கள் தரமற்றவையாக உள்ளதாக கூறப்படுகிறது. பதில்களை அனுப்ப தாமதமாவதால் வேலைப்பளு அதிகரிப்பதுடன் ரயில்வேக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரமான பதில்கள் என்பதை உறுதிப்படுத்தும் நிலையில் இனி மண்டல பொதுமேலாளர், கோட்ட பொதுமேலாளர் ஒப்புதல் பெற்றே அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post பிரதமர் மோடி செல்ஃபி பூத் சர்ச்சை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க ரயில்வே கட்டுப்பாடு விதிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: