ராஜஸ்தானில் அமைச்சரவை விஸ்தரிப்பு பாஜ வேட்பாளர் அமைச்சராக பதவியேற்றார்: எம்எல்ஏ ஆகும் முன்பே பொறுப்பு தேடி வந்தது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான்சட்டப்பேரவை தேர்தலில் 199ல் 115 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மாநில முதல்வராக பஜன் லால் சர்மா கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார். தியா குமாரி, பிரேம்சந்த் பைர்வா துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேலாகியும் புதிய அமைச்சர்கள் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது.

இதில் 12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 6 முறை எம்எல்ஏ, 3 முறை எம்பியாக பதவி வகித்த கிரோடி லால் மீனா, 4 முறை எம்எல்ஏவான கஜேந்திர சிங், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.17 பேர் புதுமுகம். மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன.

இதில், கரண்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் மரணத்தால் அத்தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜனவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் பாஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுரேந்திர பால் சிங் நேற்று இணை அமைச்சராக பொறுப்பேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்ஏ ஆகும் முன்பே அமைச்சரான இவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. காங். குற்றச்சாட்டு: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா தனது டிவிட்டர் பதிவில், ‘‘பாஜவின் ஈகோ உச்சத்தில் உள்ளது. நாட்டிலே முதல் முறையாக ஒருவர் எம்எல்ஏ ஆகும் முன்பே அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் வாக்காளர்களை பாஜ திசை திருப்ப பார்க்கிறது. இதைப் பற்றி தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் தருவோம்’’ என்றார்.

The post ராஜஸ்தானில் அமைச்சரவை விஸ்தரிப்பு பாஜ வேட்பாளர் அமைச்சராக பதவியேற்றார்: எம்எல்ஏ ஆகும் முன்பே பொறுப்பு தேடி வந்தது appeared first on Dinakaran.

Related Stories: