ஏன் எதற்கு எப்படி: திருமாலின் மார்பில் கௌஸ்துபம் எப்படி வந்தது?

– திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

திருமாலின் மார்பில் கௌஸ்துபம் எப்படி வந்தது?
– ராமபிரியன், திருச்சி.

`கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாசாக்ரே நவமூர்த்திகம் கரதலே வேணும்கரே கங்கணம்’ என்று ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் திருமாலை வர்ணிக்கிறது. தேவர்களும் அசுரர்களும் ஒன்றாக இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த பொருட்களில் ஒன்றுதான் இந்த கௌஸ்துபம் எனும் ரத்தினம். இதனை, திருமால் தனது மார்பில் அணிந்துகொண்டார் என்கிறது புராணம். பாற்கடலில் இருந்து தோன்றிய காமதேனு, மகாலட்சுமி, ஐராவதம் ஆகியவற்றைப் போலவே இந்த கௌஸ்துபம் என்கிற ரத்தினமும் மிகவும் சிறப்பு பெறுகிறது.

?சாப்பிட்ட பின்பு இலையை மூடிவிடுவது சரியா, தவறா?
– அஸ்வினி, புதுக்கோட்டை.

சாப்பிட்ட பின்பு இலையை மூடக்கூடாது. சாப்பிட்டு முடித்த பின்பு இலையின் மேல் புறத்திலிருந்து கீழ்ப்புறம் நோக்கி, அதாவது உட்கார்ந்து சாப்பிடுபவர் தன்னை நோக்கி இலையை மூடினால் உறவு தொடரும் என்றும், மீண்டும் அந்த வீட்டில் சாப்பிட விரும்புகிறார் என்றும், கீழ்ப்புறத்தில் இருந்து மேல்நோக்கி மூடினால் உறவு தொடராது என்றும் அந்த நபர் மீண்டும் அந்த வீட்டில் சாப்பிட விரும்பவில்லை என்றும் சொல்லப்படுவது, திரைப்படத்தில் வரும் வசனங்கள் மூலமாக நம்மவர்கள் பரப்புகின்ற செய்திதானே தவிர, உண்மையில் சாஸ்திர ரீதியாக சாப்பிட்ட பின்பு இலையை மூடக்கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியேதான் எழுந்திருக்க வேண்டும்.

இலையில் நிறைய உணவுப் பண்டங்களை மீதம் வைத்து எழுந்தால், அது உணவு பரிமாறியவரின் மனதினை பாதிக்குமே? என்று நினைத்தால், அளவோடு உணவினைப் பரிமாறச்சொல்லி தேவையான அளவிற்கு மட்டும் கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு, இலையில் எதையும் மிச்சம் வைக்காமல் எழுந்திருக்க வேண்டுமே தவிர, நாம் செய்யும் தவறுகளை மறைக்கும் விதமாக செயல்படக் கூடாது. சாப்பிட்டபின்பு இலையை மூடுவது என்பது சாஸ்திரத்திற்கு புறம்பானது.

?சில ஆலயங்களில் கை, கால் போன்ற உடல் உறுப்புப் பொம்மைகளை உண்டியலில் போடுவதன் தாத்பரியம் என்ன?
– மோனிகா.எஸ், காட்டுமன்னார்குடி.

விபத்து அல்லது நோயின் காரணமாக ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்படும்போது, அந்த பாதிப்பிலிருந்து மீண்டு உடல் ஆரோக்யம் பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்துகொள்பவர்கள் இதுபோன்ற உடல் உறுப்புப் பொம்மைகளை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். உதாரணத்திற்கு, கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து நிவாரணம் பெற வேண்டி கண்மலர்களை காணிக்கையாக செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

விபத்தில், கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அதனால் நடக்கமுடியாமல் அவதிப்படுபவர்கள், அந்தப் பிரச்னையில் இருந்து வெளிவர கால்போன்ற உருவத்தினை வெள்ளி உலோகத்தில் செய்து காணிக்கை வழங்குவதாக பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த வழக்கத்தினை பெரும்பாலும் அம்பிகையின் ஆலயத்திலும் ஒருசில பரிகார ஸ்தலங்களிலும் காணலாம். அதுபோன்ற, காணிக்கைகள் தூய வெள்ளியினால் செய்யப்பட்டதாக இருந்தால் நல்லது.

?எந்த நாட்களில் நகம் வெட்டுவது, முகச்சவரம் போன்றவற்றை செய்யக்கூடாது?
– த.சத்தியநாராயணன், சென்னை.

சவரம் செய்துகொள்ளும்போது நகத்தினையும் வெட்ட வேண்டும். ‘வபனசாஸ்திரம்’ என்ற பெயரில் தர்மசாஸ்திரம் இது குறித்து பல விதிமுறைகளைத் தந்துள்ளது. பல்வேறு விதிமுறைகள் இந்த வபனசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், ஒருசில முக்கியமான விதிகளை மட்டும் இங்கே பார்ப்போம். முகத்தில் மட்டும் சவரம் செய்துகொள்ளக்கூடாது. முடியை இரண்டாக வெட்டுதல் கூடாது, மழித்தல் வேண்டும்.

செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கட்டாயம் வபனம் செய்து கொள்ளக் கூடாது. திங்களும், புதனும் சவரத்திற்கு உகந்த நாட்கள். மாதப் பிறப்பு, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி, சிராத்த நாட்கள் ஆகியவற்றில் சவரம் கூடாது. சூரிய உதயத்திற்கு முன்னும், பகல் ஒரு மணிக்கு மேலும் சவரம் செய்துகொள்ளக் கூடாது. ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் சவரம் என்பதே கூடாது.

சவரம் செய்து கொள்வதற்கு முன், தண்ணீர் தவிர மற்ற எதையும் சாப்பிடக்கூடாது. சவரம் செய்துகொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்யக் கூடாது. சவரம் செய்யப்படும்போது மௌனம் அவசியம். ஒரே நாளில், தந்தையும் மகனும், அண்ணனும் தம்பியும் சவரம் செய்து கொள்ளக் கூடாது. பிறந்தநாளில் சவரம் செய்துகொள்ளக் கூடாது. இந்த அத்தனை விதிகளையும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.

அன்னியர் ஆட்சிக் காலத்தில் இருந்து, ஆங்கிலேய கலாசாரத்திற்கு நாமும் மாறிவிட்டதால், இந்த விதிகளை முற்றிலுமாக மறந்துவிட்டோம். மேற்சொன்ன அனைத்து விதிகளுமே நம் உடல் ஆரோக்கியம் சார்ந்தவை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள இயலும். முடியை இரண்டாக வெட்டுதல் கூடாது என்கிறார்கள். நம்முடைய தலைப்பகுதி, அதாவது கபாலம் என்பது பூமியில் வாழுகின்ற நம்மையும், வானில் இருந்து வருகின்ற தெய்வீக சக்தியையும் இணைக்கின்ற பகுதி என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நம்முடைய தலைப்பகுதியானது செல்போன் டவரின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள ரிசீவரைப் போல என்று எடுத்துக் கொள்ளலாம். கிரஹங்கள் மற்றும் விண்மீன்களில் இருந்து வெளிப்படுகின்ற கதிர்வீச்சினை மனிதன் மீது இழுத்துக் கொடுக்கின்ற பணியை தலைப்பகுதியானது செய்கிறது. செல்போன் டவரில் உள்ள ரிசீவரை, சர்வீஸ் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தானே செய்வார்கள். அதுபோல, சவரம் செய்துகொள்ள இப்படி குறிப்பிட்ட காலத்தினை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் சவரமே கூடாது என்று சொல்லப்பட்டதன் காரணத்தை யோசித்துப் பாருங்கள். இந்த மாதங்களில் தட்பவெப்ப நிலை என்பது ஒரே சீராக இருக்காது, இந்த மாதங்களில் முடியை மழிப்பதால் உடல் ஆரோக்கியம் கெடும் என்பதே அதற்கான காரணம். இவ்வாறு வபனசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகள் அனைத்தும் மனித உடலின் ஆரோக்யம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தினைக் கொண்டதே ஆகும். இந்த விதிமுறைகள் அனைத்தும் ஆண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டதே ஆகும்.

அப்படியென்றால் பெண்கள் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை? என்று தவறாக புரிந்துகொள்ளக் கூடாது. கணவனை இழந்த பெண்கள், அதாவது கைம்மை நோன்பினை நேர்ந்திருக்கும் கைம்பெண்களைத் தவிர மற்ற பெண்களுக்கு சவரம் என்பதே கிடையாது என்பதையே சாஸ்திரம் வலியுறுத்துகிறது. பியூட்டி பார்லர்கள் நிறைந்திருக்கும் தற்கால வாழ்வியல் சூழலில், இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்வதைவிட, முடிந்தவரை இந்த விதிமுறைகளை கடைபிடித்துப் பாருங்கள். குடும்பத்தில் ஆரோக்கியமும், செல்வச் செழிப்பும் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஏன் எதற்கு எப்படி…?
தினகரன், ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.

The post ஏன் எதற்கு எப்படி: திருமாலின் மார்பில் கௌஸ்துபம் எப்படி வந்தது? appeared first on Dinakaran.

Related Stories: