‘‘மாத்ரு தேவோ பவ’’ வாக்குப்படி மாதாவை போற்றிய மகான்

*ஸ்ரீஆதிசங்கரர் ஜெயந்தி – 12.05.2024

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ எனும் பதங்களைப் பொதுவாக நாம் ஒரு தொடர் முறையில் பயன்படுத்துகிறோம். இத்தொடர் அதற்கென ஒரு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு குழந்தை பிறந்தவுடன் தாயைத் தான் முதலில் காண்கிறது. தாய், தந்தையை குழந்தைக்குக் காண்பிக்கிறாள். தந்தை, அதனை குருவிடம் இட்டுச் செல்ல, குரு அக்குழந்தையை இறைவனிடம் கொண்டு செல்கிறார். இந்த நான்கு பதங்களின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு வரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் தாயே முக்கியத்துவம் பெற்று, முதலிடம் வகிக்கிறாள். பகவத் கீதையின் பிரதான செய்தி பக்தியாகும். தாயே பக்தியின் அடையாளம். தந்தை ஞானத்தின் அடையாளம். குரு வைராக்கியத்திற்கான அடையாளம். இறைவனோ, ஆத்ம ஞானத்தின் ஸ்வரூபமாவார். தெய்வீகத்திற்கு இந்த நான்கு படிகளில் ஏறிச் செல்வதனால் மட்டுமே, நம்மால் வீடு பேற்றினை அடைய முடியும். ‘தாயன்பு’ ஒவ்வொருவராலும் போஷிக்கப்பட வேண்டும்.

இன்று இந்த அன்பானது அதிக பேராசை, சுயநலம், செல்வம் ஆகியவற்றின் மீதான ஆசையால் தூண்டப்படுகிறதே அன்றி, ‘தாய்க்காக’ தானாகவே உதித்திடும் பாசத்தினால் அல்ல. கோடியில் ஒருவர் மட்டுமே, தனது தாய்க்கு உணவு, ரத்தம், உயிர் ஆகியவற்றுக்காகத்தான் தாம் கடன்பட்டுள்ளோம். என உணர்கின்றனர். அவள் எங்கிருந்தாலும், ‘தாய்’ உண்மையில் தெய்வம் என உணர வேண்டும் ‘மாத்ரு தேவோபவ’ `பித்ரு தேவோபவ’, `ஆச்சார்ய தேவோபவ’, `அதிதிதேவோ பவ’ என்கிற வேதவாக்கியங்களை தெய்வமாகக் கருதுங்கள் இவர்களில் தாயே முதன்மையானவளாகிறாள்.

அவளே ஒவ்வொருவருக்கும் முதல் ஆசிரியர் ஆகிறார். குழந்தையின் நல்வாழ்விற்காக மிகவும் கடுமையாக உழைப்பவள். அன்பு, பாசம் செலுத்துபவள் அவளே! ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானினும் நனி சிறந்தனவே’, ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’, ‘தாயிற்சிறந்த கோயிலுமில்லை’ என்று தமிழ் மந்திரங்கள் கூறுவதும், ‘மாத்ரு தேவோ பவ’ என வேத வாக்காக உபநிடதங்கள் கூறுவதும், இப்படிப் பல சிறப்புகளை நாம், நம்மைப் பெற்ற தாய்க்கு அளித்துள்ளோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘தாய்’ என்பவனைத்தான் முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள் நம்முன்னோர்கள். ஆம்.. தாய்தான் முதல் தெய்வம். பூரணத் தூய்மை, தன்னலமில்லாமை, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிக்கும் தன்மை, பூரணத்தியாகம், பூரண அன்பு இவையெல்லாம் எங்கு குடி கொண்டிருக்கின்றனவோ அங்குத் தாய்மை முழுமையோடு விளங்குகிறது.

பாரத புண்ணிய பூமியில், எத்தனை எத்தனையோ மாமுனிவர்கள், மகான்கள், மகரிஷிகள், மன்னாதி மன்னர்கள், அவதார புருஷர்கள் என்று பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்தார்கள் மறைந்தார்கள். இவர்களில் யாருமே ‘தாயின் பெருமை’ குறித்துப் பாராட்டியதாகத் தெரியவில்லை. பதிவு செய்யவுமில்லை. ஆனால், கலியுகத்தில் அவதரித்த மகான்களில் மூவர் மட்டும்தான் தாயின் பெருமையைப் போற்றிப் புகழ்ந்து, அவளது இறுதிக் காலம் வரை இருந்து கடமைகளைச் செய்ததோடு பாடல்களாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். துறவு பூண்டு, சந்நியாசி கோலத்தில் எங்கெங்கெல்லாமோ அலைந்து திரிந்த மகான்கள் தாயின் இறுதிக் காலத்தில் ஓடோடி வந்து அவளுக்குச் செய்ய வேண்டிய கடமை களையெல்லாம் குறைவின்றிச் செய்து உத்தம புத்திரர்களாக விளங்கினார்கள். தாயின் அருமை பெருமைகளையெல்லாம் பாடல்களில் எழுதிப் போற்றினார்கள். தாயன்பை உலகறியச் செய்தார்கள்.

இறுதிக் காலம் வரை தாயை தெய்வமாகப் போற்றி வணங்கி வழிபட்ட அந்த மூன்று மகான்கள், காவிரிப் பூம்பட்டினத்தில் அவதரித்த பட்டினத்தடிகள், காலடியில் அவதரித்த ஆதிசங்கர பகவத் பாதர், திருச்சுழியில் அவதரித்து திருவண்ணாமலை அருளாட்சி புரிந்த பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆகிய முப்பெரும் மூன்று துறவியர்களே!

முற்றும் துறந்த இந்த மூன்று மகான்களும் பெற்ற தாயின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி, அவளுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களையெல்லாம் குறைவின்றிச் செய்து, பிரிவாற்றாமையால் இரங்கற்பாவாக பல பாடல்கள் பாடிய உத்தம புத்திரர்கள் இவர்கள் மட்டுமே. அந்த வகையில், ஆதிசங்கர பகவத் பாதர் தம் தாய் ஆரிபாம்பாவுக்காக செய்த சேவையை அவரது இந்தாண்டு ஜெயந்தி நன்நாளில் விரிவாகக் காண்போம்.

ஸ்ரீஆதிசங்கரரின் அன்னை, ஆரியாம்பாவை நினைக்கும் போதெல்லாம், தாய்ப் பாசமும் தனயனின் கடமையுணர்வும் நம் நினைவுக்கு வரும். தொலைவில் ஓடிய பூர்ணா நதியை வயது முதிர்ந்த அன்னையின் சௌகரியத்திற்காக சங்கரர் தம் வீட்டின் அருகில் ஓடச் செய்த நிகழ்ச்சி அற்புதமானது. அது மட்டுமல்ல, நதியில் நீராடுவதற்காக இறங்கிய சிறுவனின் காலை முதலை பற்றிக் கொள்வதும், கரையில் நிற்கும் தாயார் அதனைக் கண்டு நெஞ்சம் துடித்துக் கதறுவதும், ‘‘தாயே! நான் சந்நியாசம் ஏற்றுக் கொண்டால் சாஸ்திரப்படி நான் மறுபிறவி பெற்று உயிர் பிழைப்பேன்.

அனுமதி கொடு அருமை மகனைக் கண் எதிரிலேயே உயிரோடு துறப்பதா அல்லது அவன் துறவு நிலை ஏற்பதை அனுமதிப்பதா? என்று புரியாமல் உணர்ச்சிப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் அந்த அன்னை, இறுதியில் ‘அன்பு மகன் எங்கேயாவது உயிரோடு இருந்தால் போதும்’ என்று மனதைக் கல்லாக்கி, பாசத்தை அறுத்துக் கொண்டு, கண்களில் கண்ணீர் பெருக, ‘அன்பு மகனே’ நீ உன் விருப்பம் போல் சந்நியாசம் ஏற்றுக் கொள்’ என்று அனுமதி வழங்கி, மகத்தான ஒரு தியாகம் செய்வதும் நம் மனத்தில் ஊன்றிப் பதிந்து விட்ட உன்னதமான வரலாறு அல்லவா?
சின்னஞ்சிறு பாலகன் முதலையின் வாயிலிருந்து தப்புவதற்காக அன்னை ஆரியம்பாளின் அருளாசியோடு ‘ஆபத் சந்நியாசம்’ பெற்றுக் கொண்ட போது, கண்களில் கண்ணீர் அருவியாய்ப் பொழிய, கடமையை மறவாத திருமகனாக, ‘‘என்னருமைத்தாயே! நான் எங்கேயிருந்தாலும் உன் இறுதிக் காலத்தில் உன்னோடு இருக்க ஓடோடி வருவேன். உனக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வேன். உனது இறுதிக் கடன்களைச் செய்து முடிப்பேன். இது உறுதி என்று சத்தியவாக்கு தந்து விட்டு, புண்ணிய பாரத யாத்திரையை மேற் கொண்டார் சங்கரர். பாரதத் திருநாடெங்கும் புனித யாத்திரை மேற்கொண்டார்.

இமயத்தின் உச்சியில் அவர் பத்ரிநாத் எனும் க்ஷேத்திரத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்த போது, அன்னை ஆரியாம்பாள் மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று அறிந்த கணமே, பத்ரிநாத்திலிருந்து பதறித்துடித்து, ஓடோடி வந்தார். அன்புத் தாயின் உடல் நிலையைக் கண்டு கலங்கிப் போய், கட்டித் தழுவி கண்ணீர் விட்டழுதார். தன்னைப் பெற்றவளுக்கு இறுதிக் காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து, அன்னையின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் பெருக, கரங்களைப் பற்றிக் கொண்டு ஆறுதல் கூறினார்.

அவளுக்குச் செய்ய வேண்டிய பணி விடை களைச் சிரத்தையோடு செய்தார். அப்போது அந்தத் தாய், தன் அன்பு மகனை பெருமையுடன் பார்க்கிறாள். மிகவும் கொடுத்து வைத்தவள் அந்தத்தாய். உற்றுப் பார்த்தாள். தாய்ப் பாசத்தால் உணர்ச்சி வசப்பட்டு கண்கள் கண்ணீர் சொரிய, மகனின் கரங்களைப் பற்றித் தடவியபடி தழுதழுக்க பேசுகிறாள்.

‘‘அன்பு மகனே! சங்கரா! உலகமெல்லாம் புகழ்ந்து பாராட்டப்படும் என் கண்ணான கண் மணியைக் காணாமலே கண்ணை மூடி விடுவேனோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளை, என் செல்வமே! நீ வந்து விட்டாய். மகனே! உன் பவள வாய் திறந்து ஏதாவது நல்ல விஷயம் சொல்வேன். நான் போகிற வழிக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்’’ என்று அன்னை வாத்சல்யத்துடன் கேட்க, அதைக் கேட்ட சங்கரர், பாச உணர்வால், உணர்ச்சிப் பெருக்கால் கண்கள் நீரை அருவியாய்க் கொட்டின. பாசத்தை எண்ணும் போது ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ அல்லவா?

அன்றொரு சமயம், திருமுருகப் பெருமான் தகப்பன் சுவாமியாக இருந்து தந்தை அகிலாண்டே ஸ்வரனுக்கு ஞானோ பதேசம் செய்தார் அல்லவா?’ இன்று தாய்க்கு ஞானோ பதேசம் செய்கிறான் ஆசாரிய குமரன். குலதெய்வமாக விளங்கிய ஸ்ரீகிருஷ்ணன் புகழ் கேட்க வேண்டும் என்று விரும்பினாள் அன்னை ஆரியாம்பாள். சில நாட்களாகவே, அருகில் இருந்த கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று கண்ணனைக் கண்ணாரக்கண்டு தரிசிக்க முடியாமல் போய் விட்டதே என்ற குறை அவளுக்கு இருந்தது. அன்னையின் குறையை உடனே போக்கி வைத்தார், கடமை தவறாத மகன் சங்கரர். அன்னைக்காக கிருஷ்ணன் மீது அற்புதமாக எட்டுப் பாடல்கள் இயற்றினார், ஆதிசங்கரர்.

அதுதான் தேனினும் இனிய ‘‘கிருஷ்ணாஷ்டகம்’’. மாயக் கண்ணனை அவள் கண் முன்கொண்டு வந்து நிறுத்தியது. இன் குரலெடுத்து கிருஷ்ணாஷ்டகம் பாடி அவள் காது குளிர, மனம் மகிழ கிருஷ்ண தரிசனமும் செய்து வைத்தார் சங்கரர். அப்பாடல் இது.

‘‘வஸூதேவஸூதம் தேவம் கம்ஸ சாணூர
மர்த்தனம்
தேவகி பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே
ஜகத் குரும்!
அதஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர சோபி
தம்
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே
ஜகத் குரும்!
குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபா

நனம்
விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே
ஜகத் குரும்!
மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம்
சதுர்ப்புஜம்
பாஹி பிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம்
வந்தே ஜகத்குரும்!
உத்புல்ல பத்ம பத்ரா க்ஷம் நீல ஜீமுத
ஸந்நிபம்
யாதவானாம் ஸிரோ ரத்னம் கிருஷ்ணன்
வந்தே ஜக்த குரும்!

ருக்மிணி கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸீசோ
பிதம்
அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே
ஜகத் குரும்!
கோபிகானாம் குஸத்வந்த்வ குங்குமாங்கித
வக்ஷ்ஸம்
ஸ்ரீ நிகேதம் மஹேஷ் வாஸம் க்ருஷ்ணம்
வந்த ஜகத்குரும்!

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா
விராஜிதம்
சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே
ஜகத் குரும்!
க்ருஷ்ணாஷ்டகம் மிதம் புண்யம் ப்ராத
ருத்தாய யஃபடேத்
கோடி ஜன்மக்ருதம் பாபம் ஸ்மரணே ந
விதஸ்யதி!’’

கண்ணனை தரிசித்தவாறு கிருஷ்ணாஷ்டகம் கேட்ட படியே, அந்தப் பேரானந்தத்திலேயே கண்ணை மூடினாள் அன்னை. அவள் மீண்டும் கண்களைத் திறந்த போது, பொன்னொளிர் வடிவில் பரமபதமான வைகுண்டத்தில் இருந்தாள். தவமாதவமிருந்து பெற்றெடுத்து வளர்த்த புனிதத் தாய் மீளா உலகிற்கு நெடும் பயணம் மேற்கொண்ட போது, ‘தாய்க்குக் கர்மம் செய்யத் துறவிக்கு உரிமை இல்லை’ என்ற காரணம் காட்டி ஊரார் ஒதுங்கியிருந்து விட்டனர். தாயின் சடலத்தோடு தன்னந்தனியாக விடப்பட்ட தனயன், முழுமுதற் கடவுள் அவதாரமல்லவா! கைகூப்பி வாய் பொத்தி ஏவல் புரிய தேவர்கள் காத்திருக்கும் மகாசக்தி வடிவமல்லவா! அவர் கலங்கினார் இல்லை. கண்ணீர் விட்டார் இல்லை. அவர் அண்டத்துக்கே அதிபதியான கால் அக்னி தேவனைத் துணைக் கழைத்தார்.

இல்லத்தின் பின்புறம் ஈன்றவளுக்கு சிதை அடுக்கி சுடலைத் தீ மூட்டினார். பத்தரை மாற்றுத் தங்கமாய் பொன்னார் மேனியனைப் பெற்றெடுத்து, பச்சிளம் பருவம் முடிவதற்குள் பாருக்கு அவனைத் தாரை வார்த்துத் தந்துவிட்டு, பாசத்தை வேரறுத்து, வாழ்நாள் முழுவதும் தன்னந்தனியே வாழ்ந்து, பின்னர் இறுதி நாளில் பெற்ற பிள்ளையின் உதவியாலேயே பிறப்பு இறப்பு அற்ற முக்தி நிலை ஏய்தி, தெய்வத் தாயானாள் அன்னை ஆரியாம்பா.

அழிவற்ற ஆத்மா விடுதலை பெற்றதும், அழிந்த உடலுக்கு எரியூட்டி, பஞ்ச பூதங்களுக்கு அதை இரையிடும் போது ‘‘மாத்ரு பஞ்சகத்தைப் பாடி’’ அருளினார். அன்னை என்ற மாபெரும் தத்துவத்தை, மந்திர சக்தியை, காக்கும் கருணையை, உயிரூட்டும் அமுதை, தியாகச் திருச்சுடரை, ஆதரித்து அரவணைக்கும் உன்னதமான அன்பின் வடிவை வணங்கிப் போற்றி, வாழ்த்திப்பாடி கரைந்து உருகினார். அற்புதமான ஐந்து ஸ்லோகங்களால் ‘தாய் – சேய்’ உறவை, பரமாத்மா – ஜீவாத்மா நிலைக்கு உயர்த்த நாமும் உய்யும் பொருட்டும் உன்னதக் காவியம் படைத்தருளினார்.

‘மாத்ரு பஞ்சகம்’ என்று சொல்லப்படும் ஸ்லோகங்களில் ஒரு ஸ்லோகம்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. தாயை வந்தனம் செய்து பூமியை ஆறுமுறை வலம் வருவது, பத்தாயிரம் முறை காசி சென்று கங்கையை அடைந்து ஸ்நானம் செய்வது, சேதுவிலும் அப்படியே செய்தாலும் இதன் பலன் என்ன உள்ளதோ அதை ‘‘மாத்ரு’’ வந்தனத்தால் அடையலாம்.

அப்பாடல்;
‘‘பூப்ரத க்ஷிண ஷட் கேண காசி
யாத்ராயு தேசை
ஸேதுஸ்நான சதைதர்யச்ச
தத்பலம் மாதிரு வந்தனே’’
‘‘ஆஸ்தாம் தாவதியம்
ப்தஸீதிஸமயே துர்வார சூலவ்
யதா

நைருச்யே தன சோஷணம்
மலமயீ சய்யாசஸாம் வத்ஸரீ:
ஏகஸ்யாயி நகர்ப்ப பாரணக்
லேசஸ்ய யஸ்யா: க்ஷம:
தாதும் நிஷ்க்ருதி முன்ன தோபி தயை;
தஸ்யை ஜனன்யை நம:’’

தாயின் முடிவான நிலையைக் கண்ட ஆதிசங்கர பகவத் பாதர், ‘அம்மா, நான் எது செய்து என்ன? அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்! என் அருமைத் தாயே, என்னைப் பெற்றெடுக்கும் போது பொறுக்க முடியாததும்விட முடியாததுமான சூலை நோயைத் தாங்கினாயே! தாயே! அதற்குப் பதில் செய்தேனோ? அது போகட்டும் நான் பிறந்த பிறகும் நீங்கள் என் உடலைக் காப்பாற்ற பத்தியம் என்ற பெயரால் உப்பு சப்பில்லாத ருசி இல்லாத பொருளை உட்கொண்டு காப்பாற்றினீர்களே, என்னை உங்கள் சமீபத்தில் படுக்க வைத்து, அருவருக்கத்தக்க மல ஜலத்தில், நாற்றத்தில் படுத்திருந்தீர்களே, தாயே, இது போன்ற என்னைக் கர்ப்பம் தரித்தது முதல் எத்தனை எத்தனை கஷ்டங்களுக்கு ஆளானீர்கள் தாயே! நான் என்ன உங்களுக்குச் செய்தேன்? எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் நன்றிக் கடன் தீரவே தீராது அம்மா நான் என்ன? எந்த மகனும் ஒரு தாய் செய்த உபகாரத்திற்குப் பதிலாக எதுவே செய்ய முடியாது.

என்னருமைத் தாயே, என் தெய்வமே, உங்களுக்கு நமஸ்காரம் செய்வது ஒன்றுதான் என்னால் முடிந்தது. ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!’’ என்று உள்ளம் குமுறி வாக்கினால் உதிர்த்த அமுதமான மாத்ரு பக்தி ரூபமான தாயின் வணக்க ஸ்லோகம் இது. மாதாவை மறந்து திரிந்தலையும் மகன்களே இது ஒன்றையாவது மனனம் செய்து, மாதாவைப் போற்றிய மகான் ஆதிசங்கரர் காட்டிய வழியில் சென்று நற்பயனை அடைவீர்களாக மாத்ரு தேவோபவ.

அன்னையின் அஞ்ஞானத்தை ஞானாக்கினியால் சுட்டெரித்து, பக்தியில் கரைத்து விட்டார் ஆதிசங்கரர். பகவத் பாதர் ஜீவநதி கரையில்லாக் கடலில் கலந்து விட்டது. ஆத்மா விடுதலை பெற்று அகண்ட பிரும்மத்தோடு ஐக்கியப் பட்டுவிட்டது.காலடியில் சங்கரர் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த இரண்டு குடும்பத்தார் மட்டும் சங்கரருக்கு துணை நின்று உதவி புரிந்தார்களாம். துக்கம் விசாரிக்க வந்த அவர்களில் ஒரு இல்லத்தார் அன்னை ஆரியாம்பாவின் தலைப் பக்கம் நின்றதால் அவர்கள் ‘‘தலையாற்றுப்பள்ளி’’ என்றும், அன்னையின் கால் பக்கம் நின்ற மற்றொரு குடும்பத்தார் ‘‘கால்ப்பள்ளி’’ என்றும் அழைக்கப்பட்டனர். அப்பரம்பரையில் வந்தவர்கள் ஆதிசங்கரரின் அருளால் இன்றும் வளமோடு வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

கேரள மாநிலம் காலடி திவ்ய க்ஷேத்திரத்தில், பூரணா நதிக் கரையில், கிருஷ்ணன் கோயிலுக்கு அருகில் ஞான குரு ஆதிசங்கரருக்கும், ஞான சரஸ்வதி சாரதாம்பிகைக்கும் திருக்கோயில் அமைந்துள்ளது. ஞானதேவியின் திருச்சந்நதிக்கு நேரே அன்னை ஆரியாம்பாவின் தூய சமாதி பிருந்தாவனமாகக் காட்சியளிக்கிறது. கேரள மாநிலத்தில் முக்கிய வழிபாட்டு தலங்களில் காலடியும் ஒன்றாக விளங்குகிறது.

டி.எம்.ஆர்.வேல்

The post ‘‘மாத்ரு தேவோ பவ’’ வாக்குப்படி மாதாவை போற்றிய மகான் appeared first on Dinakaran.

Related Stories: