வித்தியாசமான வழிபாடுகள்

* ராமநாதபுரம் நயினார் கோயில் உண்டியலில் கோழிமுட்டைகளையும் காசுகளையும் போட்டு வழிபடுகின்றனர்; கூரிய முட்கள் குத்தாமல் இருக்க முள் காணிக்கையும் செலுத்துகிறார்கள்.
*காரமடை அரங்கநாதர் கோயில் தேர்த்திரு விழாவின் போது பக்தர்கள் தேரின் மீது வெண்ணெய் வீசும் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
* மதுரை மாவட்டம், திருமங்கலம் பத்திரகாளி அம்மன் ஆலய திருவிழாவில், வீடுகளில் வளர்த்த முளைப்பாரியை, பெண்கள் மேளதாளத்துடன் ஆலயத்திற்குக் கொண்டு சென்று பின் ஆற்றில் எறிகிறார்கள்.
* கேரளம், திருச்சூரில் உள்ள திருக்கூரில் தாம்புக்கயிறை பிரார்த்தனை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். அதனால் சுவாச சம்பந்தமான நோய்கள் விலகுவதாக நம்புகின்றனர்.
*திருப்பெருந்துறை யோகாம்பாள் சந்நதியில் உள்ள ஊஞ்சலை ஆட்டி நேர்ந்து கொள்ளும் பெண்களுக்கு மகப்பேறு கிட்டுகிறது.
* கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகவதி கோயிலில் நேர்ந்து கொண்டவர்கள் செய்யும் பிரார்த்தனையில் முக்கியமானது வெடி வழிபாடு.
* கர்நாடகாவில், சுப்ரமண்யா எனும் முருகனின் தலத்தில் முகத்திலோ உடம்பிலோ மரு, கட்டிகள் வந்தவர்கள் கண்ணாடிகளை வைத்து பிரார்த்தித்து, நிவாரணம் பெறுகிறார்கள்.
*மதுரை அழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கருப்பண்ண சாமிக்கு ஆடி அமாவாசையன்று மட்டுமே சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
*காசி விஸ்வநாதருக்கு தினமும் மாலை 7 மணி முதல் 8:30 மணி வரை 7 அர்ச்சகர்கள் 7 ரிஷிகளைப் போல் சுற்றிலும் அமர்ந்து வில்வ இலையில் ராமநாமத்தை சந்தனத்தால் எழுதி அர்ச்சனை செய்கின்றனர். இது சப்தரிஷி பூஜை என அழைக்கப்படுகிறது.
*‘ஈ’ வடிவில் அகத்தியர் வழிபட்ட திருஈங்கோய் மலை லலிதாம்பிகை ஆலயத்தில், யோகினிகளே பூஜைகள் செய்கின்றனர்.
*திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரருக்கு உச்சிக்கால வேளை பூஜையின் போது அர்ச்சகர் புடவை கட்டிக் கொண்டு ஈசனுக்கு பூஜை செய்கிறார்.
*திருவெண்காட்டில் அருளும் அகோரமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
* சீர்காழி சட்டைநாதருக்கு ஒவ்வொரு வெள்ளியன்றும் நள்ளிரவில் புனுகு சாத்தி பூஜை செய்கிறார்கள்
* திருநல்லூர் திருத் தலத்தில் ஆண்டிற்கொரு முறை கணநாதர் வழிபாடு எனும் பெயரில் பலிபீடத்திற்கு நள்ளிரவில் வழிபாடு நடைபெறுகிறது.
* நிலங்களைக் குத்தகைக்கு விட்டு அறுவடை ஆகும் கதிர்களை யானை மீது ஏற்றி ரங்கநாதப்பெருமாள் திருவீதியுலா வரும்போது சமர்ப்பிக்கும் நிகழ்வை கதிர் அலங்காரம் எனும் பெயரில் சித்திரை மாதத்தில் ரங்கத்தில் நிகழ்த்தக் காணலாம்.
* சித்திரை மாதம் அழகர் ராயர் மண்டபம் எழுந்தருளியதும் பட்டர் கள்ளழகர் போல் உடையணிந்து அழகர் மற்றும் சுற்றியுள்ளவர் மீது நீர் தெளிக்கும் வழிபாடு நடைபெறுகிறது.
* திருவல்லம் தல பரசுராமர் ஆலயத்தில் தலபிண்ட வழிபாடு எனும் பெயரில் முன்னோர்களுக்கு திதி தரும் பிரார்த்தனை ஆலயத்தின் உள்ளேயே நடை பெறுகிறது.
* திருப்பெருந்துறை ஆவுடையார் ஆலய கருவறையில் லிங்கம் இல்லா ஆவுடையாரும், அம்பாளின் கருவறையில் இரு பொற்பாதங்களுமே காணப்படும். இவர்களுக்குக் காட்டப்படும் கற்பூர ஆரத்தி வெளியே கொண்டுவரப் படுவதில்லை.
* திருவாரூர் ஆலயத்தில் வைகாசி ஆயில்யத்தன்று உச்சிக்கால பூஜை கிடையாது. தியாகேசர் அன்று அம்பர் மாகாளத்திற்கு எழுந்தருளி சோமயாகத்தில் கலந்து கொள்வதாக ஐதீகம்.
* சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை தேவேந்திரனால் நடைபெறுவதாக ஐதீகம். அதனால் மாலையில் பூஜை செய்தவர் காலையில் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அகம் கண்டதை புறம் கூறாதே என்பது அவர்கள் நியதி.

The post வித்தியாசமான வழிபாடுகள் appeared first on Dinakaran.

Related Stories: