விரிஞ்சனோ? விடைவலானோ?

``கோஷ்பதீ க்ருதா வாராஸிம்
மசகீ கிருத ராக்ஷஸம்
ராமாயண மஹாமாலா
ரத்னம் வந்தே அநிலாத்மஜம்’’

சிறிய நீரோடையைத் தாண்டுவதைப் போல எளிமையாக மாகடலையே தாண்டி யவனும், கொடிய அரக்கர்களைக் கொசுவைப் போல் அழித்தவனும், ராமாயணமாகிய அழகிய மாலையில் பதிக்கப்பட்ட ரத்னம் போன்றவனுமாகிய வாயுபுத்திரனை வணங்குகிறேன் என்பது ராமாயண தியான சுலோகம். பன்மணி பதித்த மாலையில் தலைமணியாய்த் திகழும் அனுமன் இந்திய பண்பாடு, இறைநெறி போன்றவற்றின் மகுடமாகத் திகழும் பாங்கு பெற்றவன்.

வேதங்களும், உபநிஷத்து களும் உணர்த்தும் சிறப்பு இயல்புகளான ஆழ்ந்த அறிவு, பணிவுடை நிறை பண்பு, குருபக்தி, பிரம்மசரியம், தூய தொண்டு, நாவன்மை, இசையாற்றல், வீரம் போன்றவற்றின் உறைவிடமாகத் திகழ்பவன். சொல்லின் செல்வனாம் அனுமனை இந்திய மக்களும், சிறப்பாகத் தமிழ் மக்களும் சாகா கவிதைகளாலும், கலை கமழும் சிற்பங்களாலும் போற்றிய வரலாறு சுவையானதாகும். கம்பனது கவிதைகளால் சிறப்பிக்கப்படும் அனுமனுக்குத் தமிழ்நாட்டில் எண்ணிறைந்த கோயில்களை எடுத்தனர்.

அனுமனின் ஆற்றலும் அவனது தோற்றமும் ஞானமும் அயோத்தியர் கோமானை மிகவும் கவர்ந்தது. சந்தித்த முதல் நாளே அனுமனின் திறம் உணர்ந்தான். தன் தம்பியான இலக்குவனுக்கு அவனை அறிமுகம் செய்தான். இதனைக் கம்பர், ‘‘நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும் கோட்படா பதமே ஐய குரக்கு உரு கொண்டது என்றான்’’ என்று கூறுகிறார்.

அனுமனின் திறனை, ‘‘ஆற்றலும் நிறைவு கல்வி அமைதியும் அறிவும் என்னும் வேற்றுமை இவனோடு இல்லையாம்’’ எனக் கூறி அனுமன் சொல்லின் செல்வன் மட்டுமல்ல ஓர் இணையிலா இசைவாணன், வேதக்கடல் கலைஞன் என்றும் கூறுகிறார். இவனது ஆற்றலால் இவன் விரிஞ்சனோ (பிரமனோ) அல்லது விடைவலானோ (சிவபெருமானோ) என்று ராமனே போற்றி வியக்கும் பெருமை அனுமனுக்கன்றி வேறு யாருக்குமே கிட்டவில்லை. இதனைக் கவிச்சக்கரவர்த்தி, ‘‘இல்லாத உலகத்து எங்கும் இவன் இங்கு இவன் இசைகள் கூறக் கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி சொல்லாலே தோன்றிற்று அன்றோ யார் போல் இச் சொல்லின் செல்வன்? வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ?’’ என இளவலிடம் பேசுவதாகக் குறிப்பிடுகிறார்.

விரிஞ்சனோ விடைவலானோ – என ராமனே வியக்குமளவுக்குப் பெருமை பெற்ற சத்திய சீலனாம் அனுமனை ராவணன் தனது அவையில் சந்திக்கிறான். மாருதியின் தோற்றத்தால், மதிமயங்கிய ராவணன் அனுமனைப் பார்த்து இவன் யார்? சக்கரம் கொண்ட மாலவனா? வச்சிரம் சுமந்த இந்திரனா? மழுவேந்திய கயிலைப் பெருமானா? தாமரையில் அமர்ந்த பிரமனா? பூமியைத் தாங்கும் ஆதிசேடனா? தென்திசை காவலனாம் யமதர்மனா? அன்றி எண்திசை காவலர்களுள் ஒருவனா? இவர்களுள் யார் இவன் என மயங்கியதாகக் காண்கிறோம்.

இதனை கம்பர் ‘‘நேமியோ? குரிசியோ நெடுங்கணிச்சியோ, தாமரைக் கிழவனோ தறுகண் பல்தலை பூமிதாங்கு ஒருவனோ’’ என்றும், ‘‘நின்று இசைத்து உயிர் கவர் நிலக்காவலனோ குன்று இசைத்து அயில் உற எறிந்த காவலனோ தென்திசை கிழவனோ திசைநின்று ஆட்சியர் என்று இசைக்கின்ற யாருள் யாவன் நீ’’ என ராவணனது மொழியால் காட்டுகின்றார்.

ராவணனிடம் அனுமன் திறம் உரைக்க முன்வந்த இந்திரசித்து ராமனைப் போலவும், சிவபெருமானைப் போலவுமே உயர் தெய்வ உருவாகவே காண்கின்றான். இதனால்தான் அனுமனை ‘‘அரி உருவான ஆண் தகை சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்’’ என்று ராவணனிடம் அறிமுகம் செய்விக்கின்றான்.

இவர்களைப் போலவே வாலி, அனுமனின் ஆற்றல் முழுவதையும் உணர்ந்தவன். எனவே, மாருதியின் ஆற்றல் குறித்து ராமனிடம் பேசும்போது, ‘‘அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செங்கை தனு என நினைதி ஓர் துணைவன் இன்னோர் அனையர் உனக்கு இல்லை’’ எனப் பேசும் பாங்காலும் அனுமனின் வீரமும் துணை செய் பண்பும் நன்கு விளங்கும். அனுமனின் பண்புகளிலேயே பணிவுடை பண்பே சோழ மன்னர்களை மிகவும் கவர்ந்தது.

மிகச் சிறந்த அறிஞன் வலிமைகொண்ட தீரன் சொல்லின் செல்வன் போன்ற பல திறன்களில் மேம்பாடுடையவனாகத் திகழ்ந்தபோதும் பணிவு குருபக்தி என்ற பண்புகளே அனுமனின் தலையாயப் பெருமையாகும். ராமனிடம் காட்டிய பக்தி அவன் முன்பு காட்டிய பணிவு இவைகளை அப்படியே சிற்பங்களாக, செப்புத் திருமேனிகளாக வடித்தனர் சோழநாட்டுச் சிற்பிகள்.

நின்ற கோலத்தில் தலைதாழ்ந்து வலது கரம் வாய்பொத்திய நிலையில் உள்ள சோழர் காலத் திருமேனிகளைக் காணும்போது ஆணவமற்ற பணிவுடை பண்பாளனின் திறனை உணரமுடிகின்றது. திருக்கடையூரை அடுத்த அனந்தமங்கலம் எனும் சிற்றூரில் உள்ள அனுமனின் செப்புத் திருமேனி குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு அனுமன் நின்ற கோலத்தில் பத்துக் கரங்களுடன் காட்சி நல்குகிறான். நாமக்கல்லில் உள்ள அனுமனின் திருமேனியும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் உள்ள திருமேனியும் பிரம்மாண்டமானவையாகும்.

‘‘அநவிரத இராம காதாம்ருத சேவகன்’’ எனத் தன்னைப் பெருமையுடன் அழைத்துக்கொண்ட ரகுநாத நாயக்கன் குடந்தையில் ராமபிரானுக்கென தனித்த ஆலயத்தைக் கட்டுவித்தான். அந்த ஆலயத்தின் கருவறையில் ராம பட்டாபிஷேகக் காட்சியைத் திருமேனிகளாக இடம்பெறச் செய்தான். அங்கு அனுமன் ஒரு கையில் சுவடிக் கட்டினையும் மறுகையில் வீணையையும் ஏந்திய நிலையில் இருக்குமாறு செய்தான். அவை அனுமனின் ஞானத்தையும், இசையாற்றலையும் காட்டுபவையாகும். விஜயநகர அரசு காலத்தில் அனுமனுக்கென எடுக்கப்பெற்ற ஆலயங்களில் பெரும்பாலும் வீர ஆஞ்சநேயரின் திருமேனிகளே இடம் பெற்றிருக்கும். ஒரு கையில் மலர் ஏந்திய நிலையில் இத்திருமேனிகள் காணப்பெறும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post விரிஞ்சனோ? விடைவலானோ? appeared first on Dinakaran.

Related Stories: