அறியாமையை அறுக்கும் அம்பிகையின் நாமம்

நகதீதிதி ஸஞ்சன்ன நமஜ்ஜன தமோகுணாநாம் இதற்கு முந்தைய நாமங்களில் அம்பிகையினுடைய கணுக்கால், அம்பிகையினுடைய பாதத்தினுடைய மேற்பரப்பு அவற்றையெல்லாம் பார்த்தோம். இப்போது அந்தப் பாதத்திலிருந்து வரக்கூடிய விரல்கள். அந்த விரல்களில் இருக்கக்கூடிய நகங்கள். இந்த நகங்கள் பிரகாசமாக இருக்கின்றன. ஒளி பொருந்தியதாக இருக்கின்றது. ஒளி பொருந்திய அந்த பாதத்தை அம்பிகையினுடைய பாதத்தை ஒரு பக்தன் அல்லது ஒரு சாதகன் வணங்கும்போது, இந்த வணங்குபவனுடைய தமோ குணத்தைநீக்கக் கூடியது அம்பிகையினுடைய நகங்கள். தமஸ் என்பது இங்கு நம்முடைய அஞ்ஞானம். விழிப்புணர்வற்ற ஜீவன, தமஸ் என்கிற அறியாமையில் மாட்டிக் கொண்டிருப்பது. இருள் மயமானது தமோகுணம்.

அப்போது அந்த நகங்கள் எப்படி நீக்குகிறது எனில் அந்த நகங்களிலுள்ள பிரகாசத்தாலேயே அந்த இருளை நீக்குகின்றது. ஏனெனில், அப்படிப் பட்ட பிரகாசமாக உள்ளதே அம்பிகையினுடைய நகங்கள். அம்பாளினுடைய பாத நகங்கள் அதிலிருந்து வரக்கூடிய பிரகாசம் ஒரு பக்தன் அல்லது ஒரு சாதகன் அம்பிகையினுடைய பாதங்களை வணங்கும்போது அவனிடம் இருக்கும் தமோகுணம் என்கிற இருட்டை இந்த நகங்களிலிருந்து வரக்கூடிய பிரகாசம் நீக்கிவிடுகின்றது. மேற்சொன்ன விளக்கமானது இந்த நாமத்திற்கான நேர் விளக்கம். இப்போது கொஞ்சம் சூட்சுமமாக சென்று பார்ப்போம் வாருங்கள். பொதுவாக நம்முடைய சரீரத்தில் நகம், முடி என்கிற கேசம் இருக்கிறதல்லவா… இவை இரண்டும் உயிருள்ள பொருளும் கிடையாது. உயிரற்ற பொருளும் கிடையாது. உயிருள்ள பொருளாக இருந்தால் அந்த நகத்தை வெட்டும்போது வலிக்க வேண்டும். வெட்டும்போது வலிக்காது. ஆனால், வெட்டி விட்டபிறகு சிறிது நாட்களிலேயே வளர்ந்துவிடுகின்றது. அப்போது அதில் உயிர் இருக்கின்றது. உயிருள்ள பொருளாகவும் இருக்கிறது.

அதே நேரத்தில் உயிரற்ற பொருளாகவும் இருக்கின்றது. அது நகத்திற்குரிய ஒரு குணம் என்று சொல்லலாம். ஒரே நேரத்தில் உயிருள்ளதாகவும் உயிரற்றதாகவும் இருக்கக் கூடியது, நகம். இப்போது இந்த இடத்தில் இந்த தமோ குணம் இருக்கிறதல்லவா… இந்த தமோகுணத்தை நீக்குவது அம்பிகையினுடைய நகம் என்று சொல்கிறார்கள் அல்லவா… அதைச் சொல்வதற்கு காரணம் என்னவெனில், இந்த தமோ குணம் நமக்குள் அதிகமாகும்போது, இந்த தமோகுணம் நமக்குள் கூடிக் கொண்டே சென்றால் என்ன ஆகுமெனில் நமக்குள் இருக்கக்கூடிய உயிர்த்தன்மை குறைய ஆரம்பித்து விடும். இந்த தமோகுணத்தினுடைய தன்மையினால் நம்முடைய உயிர்த்தன்மை குறைய ஆரம்பிக்கின்றது. நம்முடைய ignorance அல்லது அறியாமையினால் நம்முடைய awareness என்கிற விழிப்புணர்வு குறைய ஆரம்பித்துவிடும்.

இது குறைந்தால் என்ன அர்த்தம் எனில், கொஞ்சம் ஆழமாகச் சென்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் உலகியல் வாழ்க்கையை வாழலாம். Materialistic or worldly life வாழலாம். ஆனால், அதில் ஒரு ரசம் இருக்காது. அப்படியொரு ஜீவரசம், உயிர்ப்பு, விழிப்புணர்வு இல்லையெனில் அது உயிர் இருந்தும் உயிரற்ற தன்மைதானே. அப்போது இது எதுமாதிரியெனில் ஒரு நகம் மாதிரி ஆகிவிடுகின்றது. ஒருவருக்குள் தமோ குணம் அதிகமாயிற்று எனில் அவன் உயிர் இருந்தும் உயிரற்ற தன்மை. இப்போது இந்த உயிர் இருந்தும் உயிரற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடிய தன்மை தமோகுணம். அந்த தமோகுணத்தை நீக்குவது எதுவென்று பார்த்தால் அம்பிகையினுடைய நகம். ஆனால், அம்பிகையினுடைய சொரூபம் எப்படியிருக்கின்றது என்று பார்த்தால், அதை நம்முடைய சரீரத்தோடு ஒப்பிடக் கூடாது. நாம் கேசத்திலிருந்து பாதம் வரையிலான விளக்கங்களை பார்த்துக் கொண்டே வருகின்றோம். அம்பிகையினுடைய கர்ம சரீரம் கிடையாது.

நம் சரீரம் போல தோலினால் போர்த்தப்பட்ட சரீரம் கிடையாது. ஞான மயமான திவ்விய சரீரம். இந்த சரீரம் ஒளி மயமானது. விவரித்தலுக்கு அப்பாற்பட்டது. அதேசமயம் அப்பேர்ப்பட்ட மிகமிக உயிர்ப்புள்ள சரீரம். ஆகமங்களில் இந்த சரீரத்தை வித்யா தேகம் என்று அழைக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட திவ்ய சரீரத்தில் உயிர்த்தன்மை இல்லாத விஷயமே கிடையாது. நகத்தையும் சேர்த்தே… இப்போது நம்முடைய நகமானது உயிர் இருந்தும் உயிர் இல்லாத தன்மையை உடையது. ஏனெனில், இது கர்ம சரீரம். ஆனால், அம்பிகையினுடைய சரீரம் திவ்ய சரீரமல்லவா… அந்த திவ்ய சரீரத்தில் கேசமான உச்சந்தலையில் இருக்கக்கூடிய முடியில் தொடங்கி காலில் இருக்கக் கூடிய நகம் வரையிலும் எல்லாமே ஞான மயமானது. அங்கு எல்லாமே முழுவதுமான consciousness… அந்த நகம் எப்படி இருக்கிறதெனில் முழுக்க முழுக்க உயிர்த்தன்மையோடு இருக்கின்றது.

அந்த நகமானது பிரகாசமாக இருக்கிறது. அது எந்த அளவுக்கு பிரகாசமாக இருக்கிறதெனில், நம்முடைய உயிர்த்தன்மையை குறைக்கக் கூடிய, தமோ குணத்தை நீக்குகிற அளவுக்கு பிரகாசமாக இருக்கின்றது. அதாவது ஞான ஒளி ஸ்பூர்த்தியுடையதாக விளங்குகிறது. ஏனெனில், அந்த நகமானது திவ்யமானது. சைதன்யமானது. பல புராணங்களில் அம்பிகையோ அல்லது விஷ்ணுவோ அல்லது வேறு ஏதாவது தெய்வங்களோ அசுரர்களை நகத்தால் வெட்டினார்கள் என்பதற்கு தமோகுணம் என்கிற அஞ்ஞானத்தை, அறியாமையை நகத்தால் வெட்டி ஞானத்தை பாய்ச்சினார்கள் என்றே பொருளாகும். அசுரன் என்கிற அஞ்ஞானத்தை ஞானம் என்கிற நகத்தால் அம்பாள் பிளக்கிறாள் என்றே கொள்ள வேண்டும். நகத்தின் நுனி வரையிலும் ஞான மயமானதுதான். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில் அந்த நக நுனியே போதும் நம்முடைய நான் என்கிற அகங்காரத்தை கொய்து எல்லாமுமான அம்பிகையே அனைத்தும் என்கிற நிலையை அருள.

இந்தப் பாதத்திலுள்ள நகத்தை நாம் வெளியே பார்த்துக்கொண்டே வரும்போதே அம்பிகையின் அந்த நகத்தின் ஞான ஒளியானது நம்முடைய மனதை அடைத்திருக்கும் இருளை அறியாமையை வேரறுக்கும். இப்போது நாம் கால் விரலிலுள்ள நாமத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் கொஞ்சம் முன்னால் சென்று பார்த்தால் கைவிரல் நகங்களை பார்த்தோம். கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதிஹி… இந்தக் கைவிரல் நகங்களிலிருந்து மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்களையும் அம்பிகை உண்டுபண்ணுகிறாள் என்று பார்த்தோம். அப்போது கைவிரல் நகங்கள் நாராயணனுடைய பத்து அவதாரங்களையும் உண்டு பண்ணக் கூடிய அளவுக்கு ஞான மயமாக இருக்கின்றது. அதேநேரத்தில் கால் விரல் நகங்கள், அந்தப் பாதங்களை வழிபடக்கூடிய பக்தர்களுடைய மனதுக்குள் இருக்கக்கூடிய இருட்டை, தமோகுணத்தை போக்கும் அளவிற்கு ஒளி பொருந்திய ஞான மயமான கால்விரல் நகங்களாக இருக்கின்றன. மீண்டும் சொல்கிறோம்.

நம்மிடம் இருக்கின்ற உயிரற்ற தமோகுணம் என்கிற தன்மையினை நீக்கி, நமக்குள் இருக்கும் உயிர்த்தன்மை என்கிற ரசத்தை, அந்த உயிர்த்தன்மையை ஒளியை கொடுக்கக் கூடியது எதுவெனில் அம்பிகையினுடைய இந்தக் கால்விரல் நகங்கள். இன்னும் சொல்லப்போனால் நம் உடலில் இருக்கக்கூடிய அவயங்களிலே நகத்தைத்தான் நாம் மிகச் சாதாரணமாக வைத்திருப்போம். ஏனெனில், நகம் போவதுபற்றி எந்தக் கவலையும் படாமல் சுலபமாக வெட்டிவிடுவோம். மற்ற எந்த அவயத்திலிருந்து நாம் கிள்ளியும்கூட எடுக்கமாட்டோம். ஆனால், அம்பிகையினுடைய நகம் அப்படியல்ல. அம்பிகையின் நகம் முழுமையானசைதன்யமானது. அப்போது இந்த உருவ வர்ணனை முழுக்க முழுக்க தலைமுடியான கேசத்திலிருந்து தொடங்கி பாதத்திலிருக்கும் நகம் வரையிலும்… நாம் பேசக்கூடிய அந்த அப்பேர்ப்பட்ட வஸ்துவை சகுன ரூபமாகச் (உருவத்தைக் கொண்டு) சொன்னால் கூட அந்த சகுன ரூபத்திலும் முழுமையான ஞான மயமான வஸ்து என்பதை இந்த இடத்தில் நாம் பார்க்கின்றோம்.

அந்த சகுன ரூபமே போதும் நமக்கு என்று கூட கொள்ளலாம்.அந்த சகுன ரூபத்தில் இருக்கக்கூடிய பாதங்களே நமக்குப்போதும், நம்முடைய தமோ குணத்தை நீக்குவதற்கு. இங்கு நரசிம்ம பெருமாள் இரண்ய கசிபுவை நகத்தால் கிழித்தார் என்பது அவனுடைய சரீரத்தை மட்டும் அல்ல. அவனுடைய அறியாமை என்கிற தமோகுணத்தை கிழித்து ஞானம் பாய்ச்சினார். ஞான சொரூபத்தை அருளினார் என்றே கொள்ள வேண்டும். அதேபோல தேவிமகாத்மியத்தில் சூரியனே சண்டிகையின் கைவிரல் நகங்களாகி மின்னின என்று இருக்கும். எனவே, இங்கு சூர்யன் என்பது ஞான சூரியனே ஆகும். கங்கை மகாத்மியத்தில் விஷ்ணுவின் பாதத்தில் இருக்கக்கூடிய நகத்தில் பிரம்மா அனுஷ்டானத்திற்காக வைக்கப்பட்ட நீரை எடுத்து அபிஷேகம் செய்தார் என்று கொண்டால் அந்த நகக்கணுவில் பட்ட தீர்த்தமே கங்கையாகப் பெருகிற்று என்று வருகின்றது. கங்காஷ்டகமே இதை விரிவாகப் பேசுகின்றது. எனவே, அம்பிகையின் நகங்கள் என்பது சாதாரணமானதல்ல அது அறியாமையை விரட்டி, தமோ குணத்தை அழித்து, ஞானமயமாக்கும் அபூர்வமான ஞான கிரணங்களாகும்.

இதற்கான கோயிலாக நாம் திருவையாறுக்கு அருகேயுள்ள பிரம்மசிரகண்டீசர் கோயிலையே பார்க்கலாம். பிரம்மாவிற்கு ஐந்து தலை இருந்தது. அதில் எல்லாப்படைப்புகளையுமே தானே படைக்கின்றோம் என்று ஐந்தாவது தலை தனியாக அகங்கரித்து திரிந்தது. அந்த அகங்காரத்தை சிவபெருமான் தனது நகத்தால் திருகிக் கிள்ளி எறிந்தார். அதற்குப் பிறகுதான் பிரம்மா தான் படைப்பது என்பது ஈஸ்வரனுடைய கிருபையால் மட்டுமே என்று உணர்ந்தான். அதற்குப் பிறகு நான்கு தலைகள் என்று சொல்லப்பட்டும் நான்கு வேதங்களைக்கொண்டு சிருஷ்டிக்கத் தொடங்கினான். இங்கு ஐந்தாவது தலை என்பது நானே படைக்கின்றேன்… என்கிற அகங்கார எழுச்சியாகும். நான் செய்கிறேன்… என்னால் செய்யப்பட்டது… என்று எங்கு மனம் மற்றும் அகங்காரத்தின் எழுச்சியுள்ளதோ அங்கு ஞானமான ஈஸ்வரனும் அம்பிகையும் மெல்ல அதை நகத்தால் வெட்டி ஞான ஒளி கூட்டுவார்கள்.

இவ்வாறு பிரம்மாவினுடைய சிரத்தை வெட்டி தூக்கியதால் இங்குள்ள சிவனுக்கு பிரம்ம சிர கண்டீஸ்வரர் என்கிற திருநாமம் வந்தது. அதனாலேயே வேறு எந்த தலத்திலும் இல்லாத பிரம்மாவும் சரஸ்வதியும் இங்கு தனிச் சந்நதியில் அருள்வார்கள். இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர் மங்களநாயகி என்று பெயர். இந்த மங்கள நாயகியே மங்களம் என்று சொல்லக் கூடிய ஞானத்தை அருள்பவளாகவும் விளங்குகிறாள். ஈஸ்வரனின் அட்ட வீரட்டத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருவையாறு சப்த ஸ்தான தலங்களில் இதுவும் ஒன்றாகும். எனவே, திருக்கண்டியூர் தல அம்பிகையான மங்களநாயகியையும், பிரம்மசிர கண்டீஸ் வரரையும் தரிசித்து வாருங்கள்.

ரம்யா வாசுதேவன் அண்டு கிருஷ்ணா

 

The post அறியாமையை அறுக்கும் அம்பிகையின் நாமம் appeared first on Dinakaran.

Related Stories: