இந்த வார விசேஷங்கள்

சதுர்த்தி
11.5.2024 – சனி

சங்கடங்களை களைபவர் விநாயகர். அவருக்கு மிகவும் பிடித்த விரதம் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் விரதம். இந்த விரதம் விநாயகருக்கு என்றே உருவான விரதம். இந்த விரதம் மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்குஎந்தக் குறையும் இருப்பதில்லை. எல்லா தோஷமும் நிவர்த்தியாகும். என்றே சொல்லப்படுகிறது.

ஆதிசங்கரர் ஜெயந்தி
12.5.2024 – ஞாயிறு

இந்தியாவில் அவதரித்த மகான்களில் மிக முக்கியமானவர் ஆதிசங்கரர். இந்து மதம் பல பிரிவுகளாக பிளவு பட்டிருந்த காலத்தில் அவற்றை ஒன்றாக்கி, வழிபாட்டு நெறிமுறைகளை உருவாக்கியவர் ஆதிசங்கரர். கேரளாவில் அவதரித்த இவர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடந்தே சென்று சமயப் பணி ஆற்றியவர். ஆதி சங்கரரின் பெருமைகளையும், அற்புதங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம். அவரது திரு அவதார தினமானது 2024ம் ஆண்டில் மே 12ம் தேதி வருகிறது. அன்றைய தினம் ஆதிசங்கரரின் படத்தை வைத்து வழிபடலாம். அவருடைய நூல்களில் இருந்து ஒரு பகுதியை பாராயணம் செய்யலாம்.

ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி
12.5.2024 ஞாயிறு

அனைத்து உலக மக்களும் இறைவனுடைய பேரருளைப் பெற்று, நன்றாக வாழ வேண்டும். என்ற நல்ல எண்ணத்துடன் ஒரு மகான் தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் என்கிற திவ்ய தலத்தில் அவதரித்தார். அவர்தான் ஸ்ரீராமானுஜர்.120 ஆண்டுகள் இந்த நிலவுலகில் வாழ்ந்தார். அவர் திருவடிபடாத ஊரே பாரத நாட்டில் இல்லை. இந்தியா முழுவதும், பாதயாத்திரையாக பயணம் செய்து, பக்தி மார்க்கத்தையும் அதன் நிறைவு நிலையான “சரணாகதி மார்க்கத்தையும்” பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார். அவருடைய ஜெயந்தி நாள் இன்று. அவருடைய திருமேனி இல்லாத திருமால் ஆலயங்களே இல்லை. அவர் நிறுவிய அல்லது அவர் பெயரால் நிறுவப்பட்ட ராமானுஜ கூடங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. உலகம் உய்ய வந்த ஸ்ரீராமானுஜரின் அவதாரத் திருநாளான (12.5.2024) அன்று, ஒவ்வொரு திருக்கோயிலிலும் இருக்கக்கூடிய அவருடைய திருமேனியை வணங்கி, அவருடைய பேரருளைப் பெறுவோம்.

வைகாசி பெருவிழா வசந்த
உற்சவம் திருவிடைமருதூர்
13.5.2024 திங்கள்

சித்திரை மற்றும் வைகாசி மாதம் வசந்த காலங்களாக கருதப்படுகிறது. மேலும், சில ஆலயங்களில் வைகாசி விசாகத்திற்கு முன்பு வசந்த உற்சவம் நடைபெறும். சுவாமி மற்றும் அம்பாள் கோவிலின் பிராகாரத்தைச் சுற்றி வந்து பிராகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகளும் செய்யப்படும். இந்த வசந்த உற்சவம் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருமாந்துறை, மண்ணச்சநல்லூர் ஆகிய ஆலயங்களில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதலியாண்டான் திரு நட்சத்திரம்
13.5.2024 திங்கள்

இராமானுஜருக்கு எத்தனையோ சீடர்கள் இருந்தாலும், மிக முக்கியமான சீடர்களில் ஒருவர் தாசரதி என்று அழைக்கப்படும் முதலியாண்டான். இவர் இராமானுஜரின் மருமகன் ஆவார். கிபி 1027 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை) எனும் ஊரில் அனந்தநாராயணதீட்சிதர் மற்றும் நாச்சி யாரம்மாள் (இராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு “இராமானுசன் பொன்னடி” என்றும் “எதிராச பாதுகா” என்றும் “ராமானுஜர் திரிதண்டம்” என்றும் “ஆண்டான்” என்றும் பல பெயர்கள் உண்டு. இராமானுஜருக்கு இவர் மீது எல்லையற்ற அன்பு உண்டு. இராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து வைணவப் பணிகளுக்காக திருவரங்கம் சென்ற பொழுது முதலியாண்டான் கூரத்தாழ்வாரோடு இணைந்து சென்றார். அங்கே அவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தார். இராமானுஜரின் கட்டளைப்படி முதலியாண்டான், ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு திறம்படச் செய்தார். முதலியாண்டனின் திருக்குமாரராகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் அனுமதிபெற்று, எம்பெருமானாரின் வடிவம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து கட்டி அணைத்து தம் பேரருளை அதில் பாய்ச்சினார். இந்த விக்ரஹம் “தாம் உகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாக அறியப் படுகிறது. தமிழ்மொழியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் முதலியாண்டான். இப்படி பலவகையிலும் சிறப்பு மிக்க முதலியாண்டானின் அவதார நன்னாள் இன்று. வைணவ ஆலயங்களிலும் வைணவ அடியார்களின் இல்லங்களிலும் இந்த நட்சத்திரம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

வைகாசி மாதப் பிறப்பு
விஷ்ணுபதி புண்ணிய காலம்
14.5.2024 செவ்வாய்

இந்த நாளை விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பார்கள். சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒரு ராசியில் நுழைவார். அதை வைத்துத்தான் மாதங்கள் சொல்லப்படுகின்றன. சூரியன் மேஷ ராசியில் நுழைந்தால் சித்திரை மாதம். ரிஷப ராசியில் நுழைந்தால் வைகாசி மாதம். இன்று சூரியன் ரிஷப ராசியில் நுழைகிறார். வைகாசி மாதப் பிறப்பு இன்று. வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய மாதத்தின் முதல் நாளே விஷ்ணுபதி புண்ணிய காலம். விஷ்ணு பதி புண்ணிய காலத்தில் முன்னோர்கள் வழிபாடு, திதி கொடுப்பது, குலதெய்வ வழிபாடு மற்றும் தானம் தர்மம் செய்வது மிகுந்த புண்ணிய பலன் அளிக்கும்.

திருவாவடுதுறை திருக்கோயில்
ருத்ராபிஷேகம்
14.5.2024 செவ்வாய்

திருவாவடுதுறை கோமுக்தீசுவரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 36ஆவது சிவத்தலமாகும். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை – கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கிலோமீட்டர் தொலை விலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கிலோ மீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். பெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது. திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம் முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம் மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம். இத்தனை பெருமை பெற்ற தலத்தில் இன்று வைகாசி மாதப் பிறப்பை ஒட்டி ருத்ராபிஷேகம் நடைபெறும். ஸ்ரீருத்ர மந்திரத்தால் யாகங்களைச் செய்து கலசத்தில் உள்ள நீரை உருவேற்றி அந்த நீரால் சிவனை அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம் ஆகும்.

நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர்
17.5.2024 வெள்ளி

17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்மஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில் ஜீவசமாதி ஆனார். சதாசிவ பிரமேந்திரர் முக்தி அடைத்த இடம் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர் கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு மிகவும் பழமை யான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்கினீசுவரர் என்ற பெயரில் அமைந்துள்ளது. அக்கினீசுவரர் கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் சமாதி அமைந்துள்ளது. இங்கு சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை உத்சவமும், ஸந்தர்ப்பனையும் நடந்து வரும். ஆராதனையன்று ஸ்ரீ சுவாமிகளின் திருவுருவப் படம் அக்ரஹாரத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஜீவசமாதியை அடைந்து அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அக்ரஹாரத்தின் நடுவில் காவிரியிலிருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஓடுகிறது. இருபுறமும் வரிசையாக வீடுகள் இருக்கின்றன. வாய்க்காலின் இரு கரைகளிலும் வீடுகளுக்கு முன்னால் இரு வரிசையாக இலை போடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. சதாசிவ பிரம்மேந்திரரின் கீர்த்தனைகளை இசை வல்லுனர்கள் பாடிக் கொண்டிருப்பார்கள். ஆராதனை விழாவில் நடத்தப்படும் அன்ன தானத்தின் போது, பக்தர்கள் சாப்பிடும் இலைகளில் ஏதேனுமொன்றில் யாருடைய உருவத்திலாவது ஸ்ரீ சுவாமிகள் வந்து அமர்ந்து உணவு அருந்துவதாக ஒரு நம்பிக்கை.

ஆழ்வார் திருநகரி
ஒன்பது கருட சேவை
17.5.2024-வெள்ளி

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார்தான். வைணவத்தில் ஆழ்வார்கள் வரிசை நம்மாழ்வாரிடம் தொடங்கி திருமங்கை ஆழ்வாரிடம் முடியும். ஆழ்வார் அவதாரத்தலம் ஆழ்வார் திருநகரி. ஆழ்வார் திருநகரி திருக்குருகூர் என்றும் வழங்கப்படும். தாமிரபரணி கரையில் உள்ள திருத்தலம். தாமிரபரணி கரையை ஒட்டி வட கரையிலும் தென் கரையிலும் அடுத்தடுத்த திருத்தலங்களை ஒன்றாக நவதிருப்பதிகள் என்று அழைக்கும் மரபு உண்டு. ஆழ்வாரின் அவதார நட்சத்திரமானது வைகாசி விசாகம். இந்த வைகாசி விசாகத்துக்கு ஒப்பான ஒரு திருநாள் இல்லை என்றார் மணவாள மாமுனிகள்.
உண்டோ வைகாசி விசாகத்துக்கு
ஒப்பொரு நாள்?
உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர்? – உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு? தென்குருகைக்கு உண்டோ
ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்?
ஆழ்வார் திருநகரியில், ஆழ்வார் அவதாரம் செய்த வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவமாக திருநாள் நடைபெறுகிறது. அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வாகன சேவை உலா நடைபெறும். இன்று (17.5.2024) பிரசித்தி பெற்ற 9 கருடசேவை. இன்று காலை சுவாமி நம்மாழ்வார் பூப்பந்தல் மண்டபத்தில் எழுந்தருளுவார். நவதிருப்பதி எம்பெருமான்களுக்கு மதுரமான தமிழில் மங்களாசாசனம் நடைபெறும். இது பார்க்கப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அன்று இரவு மதுரகவி ஆழ்வார் முன்செல்ல, ஸ்ரீநம்மாழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருள, 9 எம்பெருமான்களும் கருட வாகனத்தில் ஆரோகணித்த கருட சேவை உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த மங்களாசாசன உற்சவத்திற்காக ஆயிரக்கணக்கான அன்பர்கள் கூடியிருப்பார்கள். ததீயாராதனம், வைணவ மாநாடுகள், கருத்தரங்கங்கள், இசைக் கச்சேரிகள் என ஆழ்வார் திருநகரியே கோலாகலமாக இருக்கும்.

அம்பாள் தபசு திருவிடைமருதூர்
17.5.2024 – வெள்ளி

திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான கோவில் ஸ்ரீமகாலிங்கேஸ் வரர் ஆலயம் திருவிடைமருதூர். பூலோக கைலாயம் என போற்றப்படும்திருக்கோவில். ஆதிசக்தியின் மத்திய ஸ்தானத்தை உணர்த்திப் பின்பு அந்த இருதய கமல மத்தியில் தியானிக்கப்பட்டு முனிவர்கள். ரிஷிகள் போன்றவர்களுக்குக் காட்சியளித்தற் பொருட்டு இங்கே எழுந்தருளியிருப்பதால் இத்திருத்தலத்திற்கு திருவிடைமருதூர் என்று பெயர் வந்தது. திருவிடைமருதூர் தலத்தைப் பற்றி கூறும்போது திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு என்பார்கள்.தேவர்கள் அமிர்தகலசத்தை எடுத்துக் கொண்டு சென்றபோது இந்த ஆலயப் பகுதியிலும் அமிர்தப் பாத்திரத்தில் இருந்து சிறிதளவு சிந்தியதனால் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்கள் அனைத்து தோஷங்களும் விலகி சிரஞ்சீவியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம். இவ்வாலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் 27 நட்சத்திரங்களுக்குரிய தனித்தனி சந்நனதிகள் கொண்ட தலமாகவும் அமைந்துள்ளது. சித்த சுவாதீனம் அற்றோர் – மனநலம் குன்றியோர் – பிணி நீங்கப் பெறும் திருத்தலம். வைகாசி மாதம் – வசந்த உற்சவ பெருவிழா – 10 நாட்கள் திருவிழாவாக நடக்கிறது. அதில் இன்று அம்பாள் தபசு, நாளை சுவாமி அம்பாள், திருக்கல்யாண உற்சவம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: