மன்னியது உன்திரு மந்திரம்


“தாச மார்க்கம்’’

உமையம்மைக்கு அடிமையாக இருப்பது. ‘தமியேனும் உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது’ (88) என்பதிலிருந்து அறியலாம்.

“சத்புத்ரி மார்க்கம்’’
உமையம்மையைத் தனது மகளாகக் கருதி வழிபடுவதையே ‘மலைமகள்’ (93) என்கிறார்.

“மாத்ரு மார்க்கம்’’

உமையம்மையைத் தாயாகக் கருதி வழிபடுவதை ‘உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே’ (33) என்பதிலிருந்து அறியலாம்.

“ராக்ஞி மார்க்கம்’’

உமையம்மையை அரசியாக கருதி வழிபடுவதை ‘எம்பெரு மாட்டிதன் பேரழகே’ (70) என்கிறார். இவை அனைத்தையும் இணைத்தே “வேதம் சொன்ன வழிக்கே வழிபட” என்கிறார்.“நெஞ்சுண்டு எமக்கு’’ என்று உமையம்மை கூறிய நால்வகை வழிபாட்டையும் செய்து வழிபடும் நெஞ்சம் எனக்கு இருக்கிறது என்று தன் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை தெளிவாக வெளிப்
படுத்துகிறார் பட்டர்.

மேலும், “நெஞ்சுண்டு’’ என்ற வார்த்தை உமையம்மையை வழிபட உதவும் மனதில் எண்ண வழுவாக [குற்றமாக] அமைந்த குணத்தையே குறிப்பிடுகிறார். அவரது நெஞ்சமானது எந்த நிலையில் இருக்கிறது, எந்த நிலையில் வளர்ந்தது, எந்த நிலையில் தாழ்ந்தது என்று புரிந்து கொண்டாலன்றி இச்சொல்லுக்குச் சரியான விளக்கம் புரிந்துகொண்டதாக ஆகாது.‘மன்னியது உன்திரு மந்திரம்’ (6) ‘குறித்தேன்மனத்தினில் நின்கோலம்’ (76) என்று அபிராமி பட்டர் உபாசனை முறையான தியானத்தையும், ஜபத்தையும் குறிப்பிடுகின்றார். ‘நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன்… யாவரொடும் பிணங்கேன் அறிவொன்றிலேன்’ (81) என்பதனால் எந்த எண்ணத்தால் தான்தாழ்ந்தேன் என்பதை குறிப்பிடுகின்றார்.

‘விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி’ (94) என்பதனால் உபாசனை தனக்கு அளித்த அனுபவத்தை குறிப்பிடுகிறார். ‘தளர்வறியா’ (69) என்பதனால் பல நாள் ஜபம் செய்து பூஜை முதலானவை செய்து பலன் கிடைக்காமல் தள்ளிப் போன போது, தனக்கு ஏற்பட்ட சலிப்புணர்வை குறிப்பிடுகின்றார். ‘இல்லாமை சொல்லி ஒருவர்தம் பாற் சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல்’ (54) வறுமை நிலையில் தான் பெற்ற அச்சக் குறிப்பை குறிப்பிடுகிறார்.

‘விள்ளேன் பரசமயம் விரும்பேன்’ (23) என்று, தான் கடைப்பிடிக்கும் உபாசனையில் எத்தனை தடை ஏற்பட்டபோதும் உமையம்மையைத்தான் வழிபடுவதை மாற்றிக் கொள்ள மாட்டேன் உள்ள உறுதியுடன் இருப்பேன் என்பதைக் குறிப்பிடுகிறார்.மேலும், ‘தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ’ (19) என்ற வாக்கால் உபாசனை தனக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை குறிப்பிடுகிறார். ‘இழவுற்று நின்றநெஞ்சே’ (71) என்பதனால் உலகியல் பொருளில், தான் மயங்கி உமையம்மையை விட்டு சற்று விலகிய நிலையைக்
குறிப்பிடுகிறார்.

‘எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே’ (82) என்று உமையம்மை தனக்கு அளித்த அருள் அனுபவங்களை நன்றியுடன் வெளிப்படுத்துகிறார். ‘ஒரு தீங்கில்லையே’ (நூற்பயன்) என்பதனால், உமையம்மையை வழிபட்டு நான் ஒரு தீயதையும் அடையவில்லை என்று நம்பிக்கையூட்டுகிறார். அபிராமி பட்டரின் காலம், இடம், நிகழ்வுகள், இவை அனைத்தையும் மனதில் கொண்டு உபாசகர்கள் இறையருளைப் பெறும் பக்குவத்திற்காக தவிர்க்க வேண்டிய பண்பையும் பின்பற்றவேண்டிய பண்புகளையும் மறைமுகமாக நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார். உள்ள உறுதியையே உமையம்மையின் கருணையை பெற்றுக் கொள்ளும் என்பதையே “நெஞ்சுண்டு எமக்கு’’ என்கிறார்.

“அவ்வழி கிடக்க’’

அபிராமி பட்டரை பொறுத்தவரை அனைத்து சாஸ்திரங்களைக் கற்றவராகவும், அனைத்து ஆன்மிக சாதகப் பயிற்சிகளை பெற்றவராகவும், தான் உமையம்மைக்குத் தொண்டு செய்வதற்குரிய சூழலையும், அவளின் கருத்தைப் பற்றியே சிந்திக்கக் கூடிய சுற்றுச்சூழலையும் பெற்றிருந்தார். அதையே இங்கு “அவ்வழி கிடக்க’’ என்ற வார்த்தையால் குறிக்கின்றார்.

வேறு எவருக்கும் கிடைக்காத மனம், காயத்தில் ஆரோக்கியம், அறிவில் தெளிவு, நெடிய காலத்தால் தோன்றிய அனுபவம் அவ்வப்போது தோன்றிய உமையம்மையின் அருள் பொதுவாக எளிமையாக யாவரும் பெற்றுவிட முடியாது என்பதை, தான் பெற்றதன் சிறப்பை ‘முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன்’ (25) ‘புண்ணியம் செய்தனமே மனமே’ (41) ‘பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை’ (27) நல்லவைகளெல்லாம் இயல்பாகவே அபிராமி பட்டரின் சூழலாக அமைந்திருப் பதையே “அவ்வழி கிடக்க’’ என்கிறார்.

“பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து’’

‘`பழி’’ என்பதனால் சாஸ்திர விதிகளுக்கு முரணான அருளைப் பெறுவதற்கு தடையான பண்புகளை குறிக்கின்றார். இதை அந்தாதி முழுவதிலும் ஆங்காங்கே சில வரிகளில் சுட்டியுள்ளதால் அறியலாம். ‘நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்’ (3) என்பதனால் உமையம்மையின் உண்மையான அன்பர்களைத் தவறாகப் புரிந்துகொள்வதைப் ‘`பழி’’ என்கிறார்.

செயலையே எண்ணி அதையே செய்ய முயல்வேரை அருளை கருதாத வரை ‘கருமநெஞ்சால் மறிந்தே விழுநரகுக்கு உறவாய’ (3) என்றும் ‘அணுகாதவர்க்குப் பிணியே’ (24) என்று இறைவியை மறக்கின்ற பண்பைக் குறிப்பிடுகின்றார். ‘நடுக்கடலுள் சென்றே விழியினும்’ (30) என்று அறியாமையைக் குறிப்பிடுகின்றார். ‘ஆசைக் கடலில் அகப்பட்டு’ (32) என்பதனால் ஆசையால் மனிதப் பிறவிக்கு வித்தாகும் பல துன்பங்கள் மற்றும் சாஸ்திர மீறல் போன்ற பல குற்றங்களைச் செய்கிறான். அது அல்லல்படுத்தும் என்கிறார். அல்லல் என்பதற்கு இடைவிடாத துன்பம் என்பது பொருள்.

இவ்வுலகத்தில் வாழும் அனைவரும் செயல்களை செய்வதினாலேயே பலனை பெறமுடியும். அப்படி செய்வதனால் புண்ணியத்தைக் குறைவாகவும், பாவத்தை மிகுதியாகவும் செய்ய வேண்டிய சூழல் வரும். அந்த சூழலில் இருந்து இறையருள் ஒன்றே காப்பாற்றும். இதையே ‘இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும்பொழுது’ (33) என்கிறார். உலகியல் வாழ்வில் ஈடுபட்டு பொருள் வேண்டி, போகம் வேண்டி, அதை அடையும் மனநிலையோடு எப்பொழுதும் சேர்ந்து இருப்பதையே மருள் என்கிறார். அந்த மருள் என்னும் பண்பால் மனது வஞ்சகத்தன்மையை அடையும். இருள் என்னும் அறியாமை சூழப்பெறும் துன்பத்திலிருந்து வெளிவர முயலாமல் தவிக்கும் இதையே ‘என் மனத்து வஞ்சத்து இருள்’ (36) என்கிறார். தீயதையே நினைப்பது, சொல்வது, செய்வது என்கின்ற பண்பைக் கொண்டவர்களை வஞ்சகர் என்கிறார்.

இதை ‘தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை’ (43) என்பதனால் அறியலாம். ஆன்மிக அடையாளங்களைத் தரித்து அதற்குரிய ஒழுக்கங்களை விலக்குவதை ‘கைதவமோ’ (45) என்கிறார்.
பிறருக்கு வேண்டுமென்றே துன்பம் விளைவிப்போரை ‘மிண்டு’ (45) செய்தாலும் என்கிறார். பொருள்களையும், பாதுகாப்பையும், நாடுவோரை ‘அசுரர்’ (51) என்கிறார்‌. இதுபோன்ற குற்றங்கள் பலவற்றையும் இணைத்தே “பழிக்கே” என்றார்.

“சுழன்று” என்பதனால் மனது மீண்டும் மீண்டும் ஒரே சூழலில் ஒரே மாதிரியான செயலைச் சிந்திக்கும். அந்த வகையில் ஆசையின் பாற்பட்டு செய்தவற்றைச் செய்வதையே சுழன்று என்கிறார். “வெம்‌ பாவங்களே செய்து” என்பது கள், களவு, கொலை, பொய், வஞ்சனை போன்ற பஞ்சமாபாதகம் என்று சொல்லக் கூடிய பண்புகளையே பாவம் என்கிறார். அந்த பாவங்களைச் செய்பவருடன் பழகுவதால் பெரிதும் துன்பம் ஏற்படுகிறது. அவர்களுடன் பழகுவதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்கின்றார். ‘எனதுன தென்றிருப் பார்சிலர் யாவரோடும் பிணங்கேன்’ (81) என்கிறார். இவ்வனைத்தையுமே “பழிக்கே சுழன்று வெம்‌ பாவங்களே செய்து” என்கிறார்.

“பாழ்நரகக்குழிக்கே அழுந்தும்”

பாவங்களை செய்வதனால் பிறவி ஏற் படும். பிறவி ஏற்பட்டால் மீண்டும் இன்ப துன்பங்களில் உலவ வேண்டும் என்பதனாலேயே ‘பாழ் நரகக்குழி’ என்று மீண்டும் பிறப்பதையே குறிப்பிடுகின்றார். ‘தாயர்இன்றி மங்குவர்’ (75) என்பதனால் நல்ல கருமங்கள் செய்பவர் இந்த பிறவிப் பிணியை அடையாமல் முக்தியை அடைவார்கள். முக்தி அடையாதவர் பிறப்பு, இறப்பு என்ற சுழலில் மாட்டி மாறிமாறி துன்புறுவர். அதையே ‘ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண்டாய்’ (7) என்பதனால் பிறவித் துன்பம் எத்தகைய கொடியது என்பதை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

தாயின் வயிற்றில் குடியிருக்கும் ஆன்மாக்கள் அடையும் துன்பத்தைக் கர்பவாச தோஷம் என்பர். அதை நீக்கவே சம்புவனம், வளைகாப்பு என்று இன்றும் சடங்கு செய்வர். இதையெல்லாம் மனதில்கொண்டே ஆன்மாக்கள் படும் அவஸ்தையை “பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்’’ என்கிறார்.

“கயவர் தம்மோடு’’

கற்க வேண்டிய ஆகம வேத நல் அறத்தை சொல்லக்கூடிய நூல்களைக் கற்காமல், அதன்வழி நில்லாமல், கற்க கூடாதவற்றை, பிறவிப்பிணிக்கு காரணமானவற்றை அடக்கமற்ற ஆசை, கள் உண்ணுதல், போன்ற தீய பழக்கங்களை மிகுதியாக கொண்டு தானும் துன்புற்று, அடுத்தவர்களையும் துன்புறுத்துகின்ற பண்புகளை தம் இயல்பாகக் கொண்டவரையே “கயவர்’’ என்கிறார். இதை ‘கல்லாமை கற்ற கயவர்’ (54) என்பதனால் அறியலாம்.

இந்தப் பாடலை பொறுத்தவரை, கயவர் என்ற சொல்லை நல்ல வழிகள் இருக்கும் போது அவற்றை விட்டு ஊரார் பழிப்பதுவும், அறத்தால் பழிப்பதுவும், மீண்டும் மீண்டும் செய்யப்படுவதும் மிகுந்த தீயதை விளைவிப்பதுவும் சாத்திரங்களில் சொல்லப்படும் நரகம் செல்வதற்குக் காரணமான சிந்தனையையும் செயல்களையும் செய்பவரையே “கயவர்’’ என்கிறார். அதற்குக் காரணமாக புலன்கள் மனம் புத்தி இவையாவற்றையும் இணைத்தே “கயவர் தம்மோடு” என்கிறார்.

“என்ன கூட்டினியே’’

என்ற வினாவால் மிக அழகாக உமையம்மையின் அருளால் தூக்கி எறியப்பட்ட தாடங்கத்தால் தோன்றிய நிலவால் அதனின்று ஓங்கிய ஒளியால் தனக்கு மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தார்க்கும் நலன்களையே செய்யக் கூடிய அருள் நிலவு தோன்றியது. அப்படி தோன்றியதால் அனுபவத்தில் அபிராமிபட்டர் அபிராமியின் அருளை உணர்கிறார். மக்களுக்கு உணர்த்துகிறார். அந்த அருள் வீச்சால் அபிராமி அம்மையின் கடாக்ஷத்தால் இதுவரை தோன்றிய புலன் உணர்வு, மன உணர்வு, அறிவு உணர்வு என்ற அந்த உணர்வையே உணர்வைத் தோற்றும் புலன்களையே கயவர் என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

அந்த உணர்வு அற்று புதிதாக ஆன்மாவில் தோன்றிய அறிவால் ஆன்மாவில் தோன்றிய உணர்வால் அதன் தோற்றத்திற்கு காரணமான ஆணவ மலத்தை [அறியாமையை] தோற்றுவித்த பண்பைக் கயவர் என்கிறார். ஆணவ மலத்தோடு உமையம்மையின் அருள் சேர்ந்ததால் உடல் உணர்வும் உயிர் உணர்வுமாகிற கயவர்களின் தொடர்பிலிருந்து விடுபட்டார். அது மீண்டும் அந்தக் கயவர்களுடன் சேராது.

அதாவது இறை காட்சி பெற்றவர்களுக்கு கயவர்களின் கூட்டினால் ஏற்படும் துன்பமில்லை. என்னாலும் இன்பமே அந்த இன்பமாகிய அருள் அமுதத்தை அனுபவிப்பதால் சூரியனைக் கண்ட இருள்போல் அறியாமையின் கூட்டு ஒழிந்தது. அது ஒழிந்ததால் பிறவிப்பிணியைத் தருகின்ற உடல் பற்றாகிய கயவரும் ஒழிந்து சிவமாம் தன்மை பெற்று நிற்றலையே “என்ன கூட்டினியே’’ என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post மன்னியது உன்திரு மந்திரம் appeared first on Dinakaran.

Related Stories: