புதுச்சேரி தலைமை செயலாளர் மாற்றம்?

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப்பிரதேச அரசின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த ராஜீவ் வர்மா புதுச்சேரியின் தலைமை செயலாளராக கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுபேற்றார். ஆனால் சில மாதங்களில் ஆளும் அரசுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோப்புகள் அனுப்பினால், விரைந்து ஒப்புதல் தந்து அனுப்பாமல் வைத்துக் கொண்டார். இதனால் பல்வேறு விஷயங்களில் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து துணைநிலை ஆளுநர் அழைத்து கேட்டால், இந்த திட்டம் தொடர்பாக புகார் வந்திருக்கிறது. எனவே கோப்புகளை அப்படியே பரிந்துரைக்க முடியாது. விசாரணைக்கு பின்னரே தங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என விளக்கம் அளித்தார்.

ஒன்றிய அரசின் விதிகள், சட்ட திட்டங்களை பின்பற்றித்தான் தன்னால் நடக்க முடியும் எனவும் கறாராக தெரிவித்தார். இதனால் தலைமை செயலாளர் மீது முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இது போன்ற சூழலில், முதல்வருக்கு தெரியாமல் புதிதாக நியமிக்கப்பட்ட செயலருக்கு இலாகா ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு நாளுக்கு நாள் அரசுக்கும், தலைமை செயலாளருக்கும் மோதல் அதிகரித்து வந்தது. இதனால் புதுச்சேரி தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறைக்கு அமைச்சகத்திற்கு ராஜீவ் வர்மா கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. இந்தநிலையில் ராஜீவ் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமை செயலாளராக டெல்லியை சேர்ந்த சஞ்சீவ்குமார் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

The post புதுச்சேரி தலைமை செயலாளர் மாற்றம்? appeared first on Dinakaran.

Related Stories: