பெட்ரோல் ஊற்றி மகளை எரித்து கொடூரமாக கொலை செய்த திருநம்பிக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும்: நந்தினியின் பெற்றோர் கண்ணீர் பேட்டி

சென்னை: மகளை பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்த திருநம்பிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என நந்தினியின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர். சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த நந்தினி (26), மேடவாக்கம் அருகே பொன்மார் என்ற இடத்தில் கை, கால் நரம்புகள் தூண்டிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் அவருடன் வேலை செய்த பாண்டி மகேஸ்வரி என்ற வெற்றிமாறன் என்ற திருநம்பியை கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நந்தினி வெற்றிமாறனுடன் பல இடங்களில் டூவீலரில் ஒன்றாக சுற்றிவிட்டு பொன்மார் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்து சென்ற வெற்றிமாறன் உனக்கு ஒரு சர்ப்பரைஸ் தருகிறேன் என்று கூறி, அவரது கை, கால்களை சங்கிலியால் கட்டியுள்ளார். நான் கொடுக்கப்போகும் பரிசை நீ முன்கூட்டியே பார்க்க கூடாது என்று கூறி கண்ணையும் கட்டியுள்ளார். ஆச்சரியத்தில் நீ கத்திவிடுவாய் என்று கூறி, அவரது வாயில் துணியை வைத்து அடைந்துள்ளார். பின்னர், அவரது கை, கால் நரம்புகளை கத்தியால் அறுத்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் நந்தினி கத்தியும் யாருக்கும் கேட்கவில்லை.

இதையடுத்து பெட்ரோலை ஊற்றி அவரை எரித்துள்ளார். கால் நரம்பை அறுத்ததால், அதிலிருந்து வெளியேறிய ரத்தம் வெற்றிமாறனின் செருப்புகளில் படிந்துள்ளது. இதனால் அந்த செருப்புகளை பக்கத்தில் தூக்கி போட்டுவிட்டு, 100 மீட்டர் தூரத்தில் நின்றவாறு என்ன நடக்கிறது என்று கண்காணித்துள்ளார். இதனிடையே நந்தினி வாயில் இருந்த துணி எரிந்து, அவர் கூச்சலிட்டுள்ளார். இதை கேட்டு அங்கு வந்த வாகன ஓட்டிகள் அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து அவரிடம் பேச்சு கொடுத்தனர். அவர் கொடுத்த செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, வெற்றிமாறன் 10 நிமிடத்தில் அங்கு வந்து உயிருக்கு போராடுபவர் தன் பெண் தோழி என்று கூறி உள்ளார்.

பின்னர், அவரும் ஆம்புலன்சில் ஏறி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரனையில், அவரது காலில் செருப்பு இல்லாமல் இருந்ததும், ரத்தக்கறை இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தனர். மீண்டும் அவரை கொலை நடந்த இடத்துக்கு அழைத்து சென்ற போது அங்கு கிடந்த செருப்பு வெற்றிமாறனின் செருப்பு என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசாரின் தீவிர விசாரணையில் நந்தினியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனிடையே உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது பெற்றோர் ரவீந்திரன், ஜெயலட்சுமி மற்றும் சகோதரி அமுதா ஆகியோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மருத்துவமனையில் நிருபர்களிடம் பேசிய நந்தினியின் பெற்றோர் ‘‘ எங்கள் மகளை கொடூரமாக கொன்ற வெற்றிமாறனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் என் மகள் ஆத்மா சாந்தி அடையும். மகளுக்கு நேர்ந்த இந்த கொடுமை போன்று உலகில் வேற எந்த பெண்ணுக்கும் வரக் கூடாது,’’ என்று கண்ணீர் மல்க கூறினர்.

The post பெட்ரோல் ஊற்றி மகளை எரித்து கொடூரமாக கொலை செய்த திருநம்பிக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும்: நந்தினியின் பெற்றோர் கண்ணீர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: