திருமலை : ஆந்திர மாநிலத்தில் 8ம் வகுப்பு படிக்கும் 4.34 லட்சம் மாணவர்களுக்கு ₹620 கோடி செலவில் இலவச டேப்களை முதல்வர் ஜெகன்மோகன் வழங்கினார். ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச டேப்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திராவில் அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேற்று இலவச டேப்கள் வழங்கப்பட்டது. அல்லூரி சீதாமராஜூ மாவட்டம் சிந்தப்பள்ளியில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று தொடங்கி வைத்து இலவச டேப்களை மாணவர்களுக்கு வழங்கினார்.
அப்போது முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: நம்முடைய பிள்ளைகள் உலகில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். கல்வி ஒன்றே குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சொத்து. மாணவர்களுக்கு நல்லது செய்தால் எதிர்கட்சிகள் விஷத்தைப் பரப்புகிறார்கள். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அனைத்து குழந்தைகளும் நமது
எதிர்காலம். அவர்கள் நமது வீட்டின் குல விளக்குகள். நமக்குப் பிறகும் நம் மாநிலத்தின் எதிர்காலத்தை நிலைநிறுத்தும் நம் சந்ததியினர்.
மாநிலத்தில் உள்ள குழந்தைகள் போட்டி உலகில் வெற்றிபெறும் வகையில் அரசு பள்ளிகளில் படிக்கும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, டேப் வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ₹620 கோடி செலவில் டேப்கள் வழங்குகிறோம். கடந்த ஆண்டும் எனது பிறந்தநாளில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு டேப்கள் வழங்கப்பட்டது.
இதில் ஆப்லைனிலும் குழந்தைகளுக்குத் தேவையான பைஜூஸ் உள்ளடக்கம் பதிவேற்றப்பட்டு பணி செய்யும் விதமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு குழந்தைக்கும் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ள இந்த டேப்கள் பயனுள்ளதாக இருக்கும். இந்த டேப்கள் ரிப்பேர் ஆகி விட்டால் உங்கள் தலைமை ஆசிரியரிடம் கொடுங்கள், அல்லது கிராமச் செயலகத்தில் கொடுங்கள். அவர்கள் ரசீது தருவார்கள். ரிப்பேர் செய்து ஒரு வாரத்தில் தருவார்கள். இல்லையென்றால் இன்னொன்று புதியதாக தருவார்கள். குழந்தைகள் பாடம் மற்றும் கற்றல் தொடர்பான விஷயங்களை மட்டுமே இந்த டேப்களில் பார்க்க முடியும்.
₹17,500 மதிப்புள்ள டேப்களில், ₹15,500 மதிப்புள்ள பைஜஸ் உள்ளடக்கத்தைச் சேர்த்து, ஒவ்வொரு மாணவருக்கும் ₹33,000 மதிப்புள்ளவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 6ம் வகுப்பு முதல் அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு வகுப்பறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் இன்டராக்டிவ் ப்ளோர் பிளான்கள் அமைக்கப்படும்.
ஏற்கனவே முதற்கட்டமாக முடிவடைந்த 15 ஆயிரம் பள்ளிகளில் 30,213 வகுப்பறைகளில் ஐஎப்பி நிறுவப்பட்டுள்ளது, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில ஆய்வகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, ஸ்மார்ட் டிவிகள் நிறுவப்பட்டுள்ளன, இதற்காக ₹420 கோடி செலவிடப்பட்டது. இன்று 2ம் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால்
மேலும் 31,834 வகுப்பறைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். ஜனவரி 30ம் தேதிக்குள் மொத்தம் 62,097 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்படும்.
நம் பிள்ளைகள் உலகிலேயே சிறந்தவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளையின் நிர்வாகத்தில் தேர்தல் வாக்குறுதியை பைபிள், குரான், பகவத் கீதையாக கருதி 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். நான் நேரடியாக பட்டனை அழுத்தி எனது சகோதரிகளின் கணக்கில் ₹2.40 லட்சம் கோடி டெபாசிட் செய்தேன். எங்கும் லஞ்சம் இல்லை. எங்கும் பாரபட்சம் இல்லை. கடன் அதிகரிப்பு கடந்த கால ஆட்சியை காட்டிலும் இப்போது மிகவும் குறைவு.இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து சிந்தப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீரை முதல்வர் ஜெகன்மோகன் ஆய்வு செய்து, குடிநீரை அருந்தினார்.
The post ஆந்திர மாநிலத்தில் 8ம் வகுப்பு படிக்கும் 4.34 லட்சம் மாணவர்களுக்கு ₹620 கோடி செலவில் இலவச டேப்கள் appeared first on Dinakaran.