சபரிமலையில் தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தகவல்

திருவனந்தபுரம்,: சபரிமலை தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் கைவசம் ஆதார் அடையாள அட்டையின் நகல் வைத்திருக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார்.

சபரிமலையில் இவ்வருட மண்டலகால பூஜைகளுக்கு நடைதிறப்பதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியது: சபரிமலையில் மண்டல காலத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வெந்நீர், சுக்கு வெந்நீர், பிஸ்கட் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி கவுண்டர்கள் மூலம் 10 ஆயிரம் பக்தர்களுக்கும் முன்பதிவு செய்யலாம்.

உடனடி முன்பதிவு செய்யும் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையின் நகல் வைத்திருக்க வேண்டும். முன்பதிவு செய்யும் போது பக்தர்களின் புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கப்படும். மண்டல, மகரவிளக்கு காலங்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ₹5 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான இடுக்கி, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் விபத்தில் சிக்கினாலும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சபரிமலையில் தரிசனத்திற்கு உடனடி முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: