கர்நாடகா சுகாதார அமைச்சர் தினேஷ்குண்டுராவ் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ ஆட்சியில் இருந்தபோது, கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பயன்படுத்த பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தபோது குற்றம்சாட்டி ஆய்வு செய்து அப்போது ஆட்சியில் இருந்த பாஜ அரசிடம் அறிக்கை கொடுத்தோம். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்ததும் கோவிட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தோம்.
நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி முதல் கட்டமாக ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் கொடுத்துள்ளது. இதில் கோவிட் காலத்தில் ரூ.14 கோடி முறைகேடு நடந்துள்ளது உண்மை என்பதை உறுதி செய்திருப்பதுடன் இந்த முறைகேடு தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பா, அப்போதைய சுகாதார துறை அமைச்சராக இருந்த பி.ராமுலு ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சிபாரிசு செய்துள்ளது. இவ்வாறு கூறினார்.
சட்ட ரீதியாக சந்திப்பேன்
முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறும்போது, ‘கோவிட் காலத்தில் நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. உயிர் பலியில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் மட்டுமே முழு கவனம் செலுத்தினோம். ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் படி, கோவிட் காலத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்தோம். பிபிஇ கிட் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதை சட்ட ரீதியில் சந்திப்பேன்’ என்றார்.
The post கொரோனா காலத்தில் ₹14 கோடி முறைகேடு; எடியூரப்பா மீது வழக்கு பாய்கிறது: நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் சிபாரிசு appeared first on Dinakaran.