உட்கட்சி பூசலால் ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜினாமா

திருமலை: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணா திடீரென பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ள நிலையில், உட்கட்சி பூசலே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த மங்களகிரி தொகுதி எம்எல்ஏ ஆல ராமகிருஷ்ணா, தான் வகித்து வந்த எம்எல்ஏ பதவியையும் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

பின்னர் ராமகிருஷ்ணா நிருபர்களிடையே கூறுகையில், தனிப்பட்ட காரணங்களுக்காக எனது எம்எல்ஏ பதவியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன் என்றார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த தொகுதியில் உட்கட்சி பூசல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகவும், அதனால் ராமகிருஷ்ணா ராஜினாமா முடிவு எடுத்திருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நெல்லூர் தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ கோட்டம் தர் கடந்த ஓராண்டுக்கு முன்பே கட்சியில் ஏற்பட்ட மோதலால் கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதோடு கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு வரும் நிலையில், எம்எல்ஏ ஒருவர் கட்சியில் இருந்து விலகி ராஜினாமா செய்திருப்பது ஆளும் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உட்கட்சி பூசலால் ஆந்திராவில் ஆளும் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: