ஊரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தலைவர், துணை தலைவரின் அதிகாரம் அதிரடியாக பறிப்பு: கலெக்டர் அதிரடி நடவடிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு திமுகவை சேர்ந்த பவானி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது வார்டு கவுன்சிலர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு வழங்கியிருந்தனர். அதில், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த விதமான, பணிகளும் நடைபெறவில்லை. வங்கி கணக்கில் இருந்த பணம் எடுத்து தன்னிச்சையாக செலவு செய்து வருகிறார். அது தொடர்பாக வரவு செலவு கணக்கு கேட்டால் பதில் ஏதும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், அவர் மீது புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், துணை தலைவர் உட்பட ஒன்பது கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக, கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இதனிடையே, புகார்களின் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில், முறைகேடு நடத்திருப்பது உறுதியானது. இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், இதற்கு நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 203 பிரிவு சார்பில் ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கு காசோலையில் கையொப்பம் செய்து, பணம் எடுக்கும் அதிகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, ‘செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு படி ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரின் காசோலையில் கையொப்பம் செய்து பணம் எடுப்பது தொடர்பாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மன்ற கூட்டத்தை கூட்டி மக்கள் பிரச்னைகளை விவாதிக்கலாம், அடிப்படை வசதிகள் செய்ய தீர்மானங்கள் நிறைவேற்றி கொள்ள அனைத்து அதிகாரங்களும் தொடரும்’ என்றார்.

 

The post ஊரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தலைவர், துணை தலைவரின் அதிகாரம் அதிரடியாக பறிப்பு: கலெக்டர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: