சுங்கச்சாவடிகளில் 40% கட்டண வசூல் ஒன்றிய அரசின் பெரும்கொடுமை: தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் குற்றச்சாட்டு

சேலம்: ‘சுங்கச்சாவடிகளில் 40சதவீதம் கட்டணம் என்பது ஒன்றிய அரசு மக்களுக்கு செய்த பெரும் கொடுமை’ என்று தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார். சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 75ம் ஆண்டு பவளவிழா சேலத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தனராஜ் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் குமார் வரவேற்றார். விழாவில், தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது: டீசல் விலை குறைப்பு, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று, அரசுக்கு பலமுறை கடிதம் எழுதி, போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால் எந்த பயனும் ஏற்படவில்லை. அது எங்களுக்கு வேதனையாக உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழகம் உள்பட மாநில எல்லைகளில் உள்ள ஆர்டிஓ செக்போஸ்டில் பகல் கொள்ளை நடக்கிறது. ஓசூரிலிருந்து கர்நாடகா வழியாக ஒரு லாரி செல்ல வேண்டும் என்றால், ரூ.2500 வசூல் செய்கின்றனர்.

தமிழகத்தில் காலாண்டு வரியை குறைக்க வேண்டும். இல்லை என்றால் மாபெரும் காலவரையற்ற போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம். தமிழகத்தில் காலாவதியான 35 சுங்கச்சாவடிகளில், 40 விழுக்காடு பராமரிப்பு பணிக்காக கட்டணம் வசூல் செய்யப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக ஒன்றிய அரசின் மீது ஒரு வழக்கு தொடர்ந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளில் பராமரிப்பு கட்டணம் மட்டும் தான், வசூல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தோம். கடந்த செப்டம்பர் 6ம் தேதி எங்களுக்கு நல்ல தீர்ப்பு வரும் என்று காத்திருந்தோம். ஆனால், ஒன்றிய அரசு 1996ம் ஆண்டு ஏற்படுத்திய சட்டத்தை மாற்றி அமைத்து, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போதே, ேராடு டிரான்ஸ்போர்ட் சட்டத்தை மாற்றியது. 6ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வரவிருந்த நேரத்தில், 4ம் தேதியே 40சதவீதம் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. அது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது இந்திய மக்களுக்கு ஒன்றிய அரசு செய்துள்ள மாபெரும் கொடுமையாகும்.இவ்வாறு சண்முகப்பா கூறினார்.

The post சுங்கச்சாவடிகளில் 40% கட்டண வசூல் ஒன்றிய அரசின் பெரும்கொடுமை: தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: