டேங்கர் லாரி மீது சுற்றுச்சுவர் விழுந்து காஸ் கசிவு: 6 மணி நேரம் உயிர் பயத்தில் தவித்த மக்கள்

மதுக்கரை: மதுக்கரை அருகே சமையல் காஸ் டேங்கர் லாரி மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், 6 மணி நேரம் உயிர் பயத்தில் பொதுமக்கள் தவித்தனர். கோவை கணபதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சமையல் காஸ் ஏற்றிக்கொண்டு வரும் டேங்கர் லாரிகள் மதுக்கரையை அடுத்துள்ள திருமலையாம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொச்சியில் இருந்து காஸ் ஏற்றிக்கொண்டு வந்த 50க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் வழக்கம்போல அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அன்று பெய்த கனமழையால் அங்கு கருங்கல்லால் கட்டப்பட்டிருந்த மதில்சுவர் நேற்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீரென இடிந்து சுவர் ஓரத்தில் நின்றிருந்த 6 டேங்கர் லாரிகள் மீது விழுந்தது. இதனால், டேங்கர் லாரிகளின் வால்வுகள் உடைந்து அதிலிருந்து காஸ் வெளியேற துவங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மதுக்கரை போலீசார் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவன ஊழியர்கள் வந்தனர். பின்னர் ஊழியர்கள் காஸ் கசிவை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு தீயணைப்பு துறையினர் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சுமார் 4 மணி நேரம் போராடி காஸ் வெளியேற்றத்தை ஊழியர்கள் கட்டுப்படுத்தி வால்வுகளை மாற்றினர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 6 மணி நேரமாக உயிர் பயத்தில் தவித்தனர்.

The post டேங்கர் லாரி மீது சுற்றுச்சுவர் விழுந்து காஸ் கசிவு: 6 மணி நேரம் உயிர் பயத்தில் தவித்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: